ஏற்காடு மலைப்பாதையில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு!

ஏற்காட்டில் இருந்து சேலம் வந்த தனியார் பேருந்து 11-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர், 34 பேர் படுகாயமடைந்தனர்.

கோடை விடுமுறையையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் ஏற்காட்டுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கார், சுற்றுலா வாகனம் மட்டுமின்றி வழக்கமாக ஏற்காட்டுக்கு செல்லும் பேருந்துகளிலும் அதிகளவில் பயணிகள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (ஏப்.30) மாலை ஏற்காட்டிலிருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். 11-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பேருந்து பக்கவாட்டு தடுப்புச் சுவரை இடித்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

10-வது கொண்டை ஊசி வளைவு அருகே விழுந்து கிடந்த பேருந்தில் இருந்த பயணிகள் இடிபாட்டுகளில் சிக்கி கூச்சலிட்டனர். அந்த வழியே சென்றவர்கள், ஏற்காடு போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் பேருந்தில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு பலத்த காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் விவரம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். விபத்து காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

இந்நிலையில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், 2 பேர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.