மேகேதாட்டு அணை வழக்கை அரசு தீவிரப்படுத்த விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேகேதாட்டு அணை குறித்த வழக்கை தீவிரப்படுத்தி, விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை அணை கட்ட ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கட்டுமானத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளதாகவும், அணை கட்டுமானத்தால் நீரில் மூழ்கும் வனப் பகுதிகளுக்கு மாற்றாக வேறு நிலம் வழங்க ஆய்வுகளும் நடப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

கடந்த பிப்.1-ம் தேதி நடந்த காவிரி ஆணையக் கூட்டத்தில் இதுகுறித்த தீர்மானத்தை கர்நாடக அதிகாரிகள் கொண்டு வந்தபோது, தமிழக அதிகாரிகள், அதை எதிர்த்து ஆட்சேபணையை பதிவு செய்துள்ளனர். மேலும், உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்து தனி வழக்காக தமிழக அரசு தாக்கல் செய்திருப்பதை வரவேற்கிறோம்.

மேகேதாட்டு அணை விவகாரம் பாஜக மற்றும் கர்நாடக ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டாகும். தமிழக மக்கள் இதை ஏற்க மாட்டார்கள். எனவே, கர்நாடக அத்துமீறலுக்கு நிரந்தர முடிவு கட்டும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேகேதாட்டு அணை குறித்த வழக்கை தீவிரப்படுத்தி, விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.