அமைச்சர் ரகுபதி மீது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்!

தனக்கு எதிராக தெரிவித்த குற்றச்சாட்டை அமைச்சர் ரகுபதி 24 மணி நேரத்தில் நிரூபிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார்.

கோடைக் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் வெப்பம் தகித்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உண்டாகியுள்ளது. இதனிடையே காவிரி நீரை முன்வைத்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ரகுபதிக்கும், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் வார்த்தை மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அமைச்சர் ரகுபதி, விஜயபாஸ்கர் புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும் வயல்களுக்கும் கொண்டு செல்கிறார் என்று குற்றம்சாட்டினார். மேலும் அவரால் தான் புதுக்கோட்டைக்கு பாதி தண்ணீர் வராமல் போகிறது என்றும், இதனை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்னை குறித்து நடவடிக்கை எடுப்பர் என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த விஜயபாஸ்கர், “புதுக்கோட்டையில் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. நான் தண்ணீர் பிரச்னை குறித்து பேசினால் அதனை திசை திருப்பும் விதமாக அமைச்சர் ரகுபதி வன்மத்தை கக்குகிறார். தனிப்பட்ட முறையில் காவிரி நீரை இடைமறித்து வயலுக்கு பாய்ச்சுகிறேன் என்று சொல்கிறார். நான் அவருக்கு 24 மணி நேரம் அவகாசம் தருகிறேன். நான் எந்த இடத்தில் காவிரி தண்ணீரை இடைமறித்தேன், எத்தனை வயலுக்கு தண்ணீர் பாய்ச்சியுள்ளேன் என்பதை அமைச்சர் ரகுபதி நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்கவில்லை என்றால் சட்டத் துறை அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்வாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “நான் அரசியலில் தடம் மாறாமல் அதிமுகவில் தொடர்ந்து பயணித்து வருகிறேன். ஆனால், ரகுபதி முதலில் அதிமுகவில் இருந்தார்.. தற்போது திமுகவில் இருக்கிறார். நாளை எந்த கட்சியில் இருப்பார் என்பது தெரியாது. திமுக தலைமைக்கு தனது இருப்பை காட்டுவதற்காக என் மீது அவதூறுகளை பரப்பி வருகிறார். நீதிமன்றத்தின் கூண்டில் ஏறி அவர் இதற்கு பதில் சொல்லும் நிலையை உருவாக்குவேன்” என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதனிடையே தனக்கு எதிராக அவதூறு பரப்பியதாக அமைச்சர் ரகுபதி மீது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.