சர்வதேச சட்டங்களுக்கு எதிராக கச்சத்தீவு குறித்து பேசிய பிரதமர் மோடியின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு அதிகாரிகள் ரத்து செய்வார்களா? என உலகத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென மனுத் தாக்கல் செய்தது பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் மத அடிப்படையில் பிரதமர் மோடி பேசி வருவதால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றமோ இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உலகத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் நெடுமாறன் நேற்று ஒரு மனுத் தாக்கல் செய்திருக்கிறார். பிரதமர் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வீர்களா? என்ற கேள்வியுடன் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பழ.நெடுமாறன் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:-
1981-ம் ஆண்டு எனக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இது 2022-ம் ஆண்டு காலாவதியாகிவிட்டது. இதனால் 10 ஆண்டுகளுக்கு பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரி விண்ணப்பித்தேன். அப்போது என் மீதான வழக்கு விவரங்களையும் தெரிவித்திருந்தேன். ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என கடந்த ஆண்டு ஒரு பேட்டி கொடுத்தீர்கள். இது சர்வதேச சட்டத்தை மீறியது. சர்வதேச சட்டங்களை அவமதிக்கும் உங்களது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரும் விண்ணப்பத்தை நாங்கள் ஏன் நிராகரிக்கக் கூடாது? என அதிகாரிகள் பதில் அனுப்பி உள்ளனர். இதனையடுத்து என் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சொன்னதால் என் பாஸ்போர்ட் புதுப்பிக்கப்படவில்லை. இது சர்வதேச சட்டத்துக்கு எதிரானது. அப்படியானால் லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது கச்சத்தீவு குறித்து பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடியின் பேச்சுக்கு இலங்கை உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. சர்வதேச அளவிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆகையால் பிரதமர் மோடியின் பாஸ்போர்ட்டையும் அதிகாரிகள் ரத்து செய்வார்களா? அப்படி இல்லை எனில் எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு பழ.நெடுமாறன் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து பாஸ்போர்ட் அதிகாரிகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.