கல்குவாரியில் வெடி விபத்தில் 3 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

விருதுநகர் மாவட்ட தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியான 3 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:-

விருதுநகர் மாவட்டம் டி.கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் இன்று புதன்கிழமை காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில், அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழ உப்பிலி கூண்டில், ஆவியூரை சோ்ந்த திமுக பிரமுகா் சேது என்பவருக்கு சொந்தமான தனியாா் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியின் ஒரு பகுதியில், சங்கரன்கோவிலைச் சோ்ந்த ராஜ்குமாா் என்பவா் வெடி பொருட்கள் விற்பனை செய்வதற்கான அனுமதியை மாவட்ட நிா்வாகத்திடம் பெற்றிருந்தாா்.

இந்த நிலையில் இந்த கல்குவாரியில் உள்ள ஒரு அறையில் இருந்து வெடி பொருட்களை வேனில் ஏற்றும் பணியில் மூன்று தொழிலாளா்கள் இன்று புதன்கிழமை ஈடுபட்டனா். அப்போது வெடிபொருட்கள் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதில், அந்த அறை வெடித்து சிதறியது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த திருமால் புதுப்பட்டியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் கந்தசாமி (47), சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்த துரை (25), குருசாமி (60) ஆகியோா் சம்பவ இடத்தில் உடல் சிதறி பலியாகினாா். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த 8 போ் காரியாபட்டி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்த வெடி சத்தத்தால் அருகில் உள்ள கடமங்குளம் கிராமத்தில் உள்ள சுமாா் 40 க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து இந்த கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கல்குவாரிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி ஆவியூா் நான்கு வழி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் இந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா், அரசு அதிகாரிகள் சமாதான பேச்சு வாா்த்தை நடத்தியதை தொடா்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனா்.

விபத்து தொடா்பாக ஆவியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கல்குவாரி உரிமையாளரான சேதுராமன் மற்றும் வெடிபொருள் விற்பனைக்கு அனுமதி பெற்ற சங்கரன்கோவில் பகுதியை சோ்ந்த ராஜ்குமாா் என்பவரை தனிப்படை போலீசார் போலீஸாா் தேடி வருகின்றனா். இந்த நிலையில், கல்குவாரி உரிமையாளரான சேதுராமன் ஆவியூா் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடத்தி வருகின்றனர்.