10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும்!

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்த அட்டவணைப்படியே வெளியாக இருப்பதாக அரசு தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையில் பொதுத்தேர்வு நடந்தது. பிளஸ்-2 தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இதேபோல் 11ம் வகுப்புக்கு மார்ச் 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையில் பொதுத்தேர்வு நடந்தது. சுமார் 8 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26-ந்தேதி முதல் கடந்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வந்தது.

12ம் வகுப்பு விடைத் தாள்கள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதியும், 10ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 22-ந்தேதியும் நிறைவடைந்தன. இதுதவிர பிளஸ்-1 வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி அரியர் மாணவர்களுக்கு கடந்த மாதம் 13-ந்தேதியுடனும், மற்ற மாணவர்களுக்கு 25-ந்தேதியுடனும் நிறைவு பெற்றது. இதையடுத்து மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் ஓரளவுக்கு முடிவடையும் தருவாயில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக 10ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்த அட்டவணைப்படியே வெளியாக இருப்பதாக அரசு தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது 12ம் வகுப்புக்கு வருகிற மே 6-ந்தேதியும் (திங்கட்கிழமை), 10ம் வகுப்புக்கு மே 10-ந்தேதியும் (வெள்ளிக்கிழமை), பிளஸ்-1 வகுப்புக்கு மே14-ந்தேதியும் (செவ்வாய்க்கிழமை) தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசு தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாணவர்கள் எளிதாக வீட்டில் இருந்தபடியே செல்போன் மற்றும் இணையதளம் மூலம் தங்களது மதிப்பெண்களை அறியலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.