சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 3 பெண் உறுப்பினர்கள் உட்பட 10 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரின் நாராயண்பூர் – கான்கெர் மாவட்ட எல்லையான அபுஜ்மார் பகுதிக்கு மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைக்கு பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றனர். மாவட்ட ரிசர்வ் போலீஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் இதில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் நாராயண்பூர் மாவட்டத்தில் டெக்மெடா, ககூர் ஆகிய கிராமங்களுக்கு இடையிலான வனப் பகுதியில் நேற்றுகாலை 6 மணியளவில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு பிறகு சம்பவ இடத்திலிருந்து 3 பெண் உறுப்பினர்கள் உட்பட 10 மாவோயிஸ்ட்களின் உடல்களை பாதுகாப்பு படையினர் மீட்டனர். மேலும் ஏகே 47ரக துப்பாக்கி உட்பட பெருமளவு ஆயுதங்களையும் தினசரி பயன்பட்டுக்கான பொருட்களையும் அங்கிருந்து கைப்பற்றினர். தற்போது என்கவுன்ட்டரில் இறந்த மாவோயிஸ்ட்களை அடையாளம்காணும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சத்தீஸ்கரின் கார்கெர் மாவட்டத்தில் கடந்த 16-ம் தேதி நடந்த என்கவுன்ட்டரில் சங்கர் ராவ் என்ற மூத்த தலைவர் உட்பட 29 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். சங்கர் ராவின் தலைக்கு பாதுகாப்பு படையினர் ரூ.25 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சத்தீஸ்கரில் கடந்த 4 மாதங்களில் மட்டும் சுமார் 90-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாநில துணை முதல்-மந்திரியும், போலீஸ் மந்திரியுமான விஜய் சர்மா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:-
கடந்த 15 நாட்களில் நக்சலைட்டுகள் மீது நடத்தப்பட்ட 2-வது பெரிய தாக்குதல் இதுவாகும். மாநிலத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் இது ஒரு பெரிய வெற்றியாகும். சுட்டுக்கொல்லப்பட்ட 10 நக்சலைட்டுகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து ஒரு ஏகே-47 துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் போலீசாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. துணிச்சலாக எதிர்கொண்ட போலீஸ் படையினருக்கு வாழ்த்துகள்.
நக்சலைட்டுகள் ஆயுதங்களைக் கைவிட்டு, அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும். முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் தலைமையிலான மாநில அரசு இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறது. பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம், அவர்களுக்கு சிறந்த மறுவாழ்வு ஏற்பாடு செய்வோம். பஸ்தாரில் அமைதி நிலவ வேண்டும். அங்கு வளர்ச்சி ஏற்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.