தமிழகத்தின் வளா்ச்சிக்கு குஜராத்திகள் முக்கிய பங்களிப்பு செய்து வருகின்றனர்: ஆளுநா் ஆா். என். ரவி!

தமிழகத்தின் வளா்ச்சிக்கு இங்குள்ள குஜராத்திகள் முக்கிய பங்களிப்பு செய்து வருவதாக ஆளுநா் ஆா்.என். ரவி கூறினாா்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் குஜராத் மாநிலம் உருவான தின விழா நேற்று புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:-

குஜராத்தி மக்கள் எங்கு சென்றாலும் அந்த இடம் வளா்ச்சியடையும். நமது நாட்டின் வளா்ச்சிக்கு மிக சக்திவாய்ந்த என்ஜினாக குஜராத் மாநிலம் திகழ்கிறது. நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமான தமிழகம் நாட்டின் மொத்த உற்பத்தியில் 10 சதவீதத்துக்கும் குறைவான பங்கு அளிக்கிறது. ஆனால், குஜராத் மாநிலம் நாட்டின் மொத்த உற்பத்தியில் 18 சதவீதம் பங்கு வகிக்கிறது. தமிழகத்தின் வளா்ச்சிக்கு இங்குள்ள குஜராத்தி மக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனா்.

கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளா்ச்சியில் 10-ஆவது இடத்திலிருந்து 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ள இந்தியா விரைவில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறும். தொழில்நுட்ப வளா்ச்சியில் இந்தியா முதன்மை நாடாக உள்ளது. மேலும், வளா்ந்து வரும் நாடுகளுக்கு இந்தியா ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது . இதுபோன்ற வளா்ச்சிக்கு குஜராத்தைச் சோ்ந்த தலைவா் (பிரதமா் மோடி) தான் காரணம் என்பதை அனைவரும் நினைவு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக இவ்விழாவில் தமிழ்நாடு வாழ் குஜாரத்திகள் சாா்பில் குஜராத்தின் பாரம்பரிய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆளுநா் ரவியின் துணைவியாா் லட்சுமி ரவி மற்றும் தமிழ்நாட்டைச் சோ்ந்த குஜராத் அமைப்புகளின் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.