“இடஒதுக்கீடு குறித்த வரலாற்றை மறந்துவிட்டு பேசுகிறார் பிரதமர் மோடி” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
பிரதமர் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் உளறி வருகிறார். அவர் உயிருடன் இருக்கும் வரை, மத அடிப்படையில் யாருக்கும் இட ஒதுக்கீடு வழங்க அனுமதிக்கவிடமாட்டோம் என்கிறார். ஆனால் உண்மை என்னவெனில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அத்தகைய அறிவிப்போ, வாக்குறுதியோ எதுவும் இல்லை. இண்டியா கூட்டணியின் வேறு எந்த கட்சியும் அத்தகைய வாக்குறுதி கொடுக்கவில்லை. எனவே, மோடி நீண்ட காலம் வாழட்டும்.
இதற்கிடையே, எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீட்டை ரத்து செய்ய மாட்டோம் என்று காங்கிரஸ் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்கிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடிக்கு இடஒதுக்கீடு குறித்த வரலாறு தெரியவில்லை. வரலாற்றை மறந்துவிட்டு பேசுகிறார். எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டது. அதேபோல் 1951-ம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்தால் ஓபிசி இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய அரசு பணிகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் ஓபிசிக்கு 27 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவந்தது நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு. பாஜகவிடம் இதேபோன்ற கோரிக்கையை முன்வைத்தால், காலாவதியான காசோலை போல், 2004 முதல் இருக்கும் அக்கட்சியின் காலாவதி வாக்குறுதிகளின் பட்டியலில் தான் அந்த கோரிக்கைகளும் இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.