கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், முறையான இடஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிய பட்டியலை நான்கு வாரத்துக்குள் வெளியிட உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த நிர்மல் குமார் உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2020ம் ஆண்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் நான்கு பணியிடங்கள் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. மற்ற 14 பணியிடங்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு நடைபெற்று ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் அதில் முறையான இன சுழற்சி முறையைப் பின்பற்றி இடஒதுக்கீடு வழங்காமல் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன.
குறிப்பாக அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேர்வாளர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே உரிய இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும், என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2020-ம் ஆண்டு,பிறப்பித்த இடைக்கால உத்தரவில், பணி நியமனங்கள் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன், “மாவட்ட கல்வி அலுவலர் நியமனத்தில் முறையான இன சுழற்சி முறை பின்பற்றப்படவில்லை. அதிக மதிப்பெண் பெற்ற தகுதியுடைய பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேர்வாளர்களுக்கு பொதுப்பிரிவில் இடம் வழங்கப்பட வில்லை. எனவே பட்டியலை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “கடந்த 2020-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார். முறையான இடஒதுக்கீடு முறையை பின்பற்றி 4 வாரத்துக்குள் மாற்றியமைக்கப்பட்ட புதிய பட்டியலை வெளியிட வேண்டும்” என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார்.