கெஜ்ரிவால் ஜாமீன் குறித்து பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இக்கட்சி இந்தியா கூட்டணியில் இருக்கிறது. அதேபோல மார்ச் 21ம் தேதியன்று டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். முதலமைச்சராக இருப்பவர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். கெஜ்ரிவாலின் கைது, ஆம் ஆத்மி மீதான பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளும் தனது கருத்தை தெரிவித்திருந்தன.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவின் கீழ் தன்னை கைது செய்தது தவறு என்றும், அமலாக்கத்துறை சட்டவிரோதமாக செயல்பட்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மாவின் ஒரு நபர் அமர்வுக்கு முன்னர் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் கெஜ்ரிவாலுக்கு சாதகமாக அமையவில்லை. ஒருபுறம் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்யாதது அமலாக்கத்துறைக்கு சவாலானதாக பார்க்கப்படுகிறது. மறுபுறம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை கூறியிருப்பது தேர்தல் நேரத்தில் ஆம் ஆத்மிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் சூழலில், கட்சியை காப்பாற்ற அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் நேரடியாக களத்தில் குதித்திருக்கிறார். அதேநேரம் ஜாமீன் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பாசிட்டிவ் சிக்னல் கொடுத்திருக்கிறது. அதாவது ஜாமீன் கோரிய மனு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கின் விசாரணை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை நீண்ட காலம் நடைபெறும் நிலையில் லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரணமாக கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க இருக்கிறோம். நாங்கள் இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. வெறுமென பரிசீலிக்க இருக்கிறோம், அவ்வளவுதான்” என்று கூறியுள்ளார்.

அதேபோல கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பதால், அவர் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட வேண்டுமா? என்பது குறித்தும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. ஒருவேளை ஜாமீன் வழங்கப்பட்டால் எந்த மாதிரியான நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்து அமலாக்கத்தறைக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அமலாக்கத்துறை தரப்பு வாதங்களை மே 7- ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ஏறத்தாழ ஒன்றரை மாதங்களாக சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியிருப்பது ஆம் ஆத்மி கட்சியினரிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.