கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் நிஜார் கொலை சம்பவம் தொடர்பாக மூன்று இந்தியர்களை கனடா போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். நிஜார் கொலையின் ‘ஹிட் ஸ்குவாட்’ என அறியப்படும் இவர்கள் மூவரும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்தவர்கள் என கனடா காவல் துறை தரப்பு தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (45) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜூன் 18-ம் தேதி கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை தீவிரவாதி என கடந்த 2020-ம் ஆண்டிலேயே இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்திருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் அவர் முன்வைத்த இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் நிஜார் கொலை சம்பவம் தொடர்பாக மூன்று இந்தியர்களை கனடா போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். கைதானவர்கள் கரண் ப்ரார் (22), கமல்ப்ரீத் சிங் (22) மற்றும் கரண்ப்ரீத் சிங் (28) எனத் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் துறையின் துணை ஆணையர் டேவிட் டெபோல் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இந்த விவகாரத்தில் இன்று கைதானவர்கள் பற்றி மட்டுமல்லாது தனிப்பட்ட வெவ்வேறு விஷயங்கள் தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அரசாங்கத்துடனான தொடர்பை நிறுவுவது குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
இந்தக் கைது நடவடிக்கை குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ”நிஜார் கொலை நாட்டில் பெரிய சிக்கலை உருவாக்கிவிட்டது. அதைக் கடந்து செல்ல முடியாத அளவுக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது” என்றார்.
கனடா போலீஸாரின் கைது நடவடிக்கை தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “இந்த நடவடிக்கை இந்தியா – கனடா உறவை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் கனடாவில் தன் சொந்த மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் வன்முறையைத் தூண்டக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.