திமுக அரசுக்கு குடிநீர் முக்கியம் இல்லை, பீர் தான் முக்கியம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பாதையில் நடந்த பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் கூறியதாவது:-
பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 9 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பேருந்து விபத்து விவகாரத்தில் அரசு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும். இந்த விபத்தில் இறந்தவர்கள், படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் சிறுகாயம் அடைந்தவர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் ஏனென்றால் ஏழை மக்கள் இந்த விபத்து காரணமாக பணிக்கு செல்ல முடியாத நிலையில் இருந்து வருகிறார்கள்.
புதிய பேருந்துகள் வாங்குவதாக திமுக ஆட்சியில் பொய் சொல்கின்றனர். சென்னையில் மின்சார பஸ்களுக்கு அதிமுக ஆட்சியில் ஜெர்மனியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அதிமுக ஆட்சியில் தான் 14 ஆயிரத்து 500 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. பழைய பேருந்துகள் மட்டுமே சீரமைப்பதாக கூறுகிறார்கள். அரசு பஸ்களில் பயணிகள் மிகுந்த அச்சத்துடனே பயணித்து வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் துவங்கிய காரணத்தினால் நீர்வளத் திட்டங்களை திமுக அரசு கைவிட்டதே தற்போதைய வறட்சிக்கு காரணம். அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் மீதமிருந்த 15 சதவீத பணிகளை நிறைவேற்றாமல் 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் நிலவும் கடும் வறட்சியால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்க கொடைக்கானல் சென்றுவிட்டார். இவர்களை பொறுத்தவரை நாட்டிற்கு குடிநீர் முக்கியமல்ல. பீர் தான் முக்கியம். திமுக எப்போது ஆட்சிக்கு வந்ததோ மதுபானத்தில் தான் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார்கள். ஏனென்றால் அதில் தான் அதிக வருமானம். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எத்தனையோ வாக்குறுதிகளை கொடுத்தது. ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்று கூறினார்கள், இதுவரை எத்தனை தடுப்பணைகள் கட்டினார்கள்? இவ்வாறு அவர் கூறினார்.