தாம்பரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதால் அவருக்கு நெருக்கடி உருவாகியுள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கு முன்னதாக தேர்தல் பறக்கும் படைகள் மூலமாக மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடைபெற்றதோடு, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 640 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இது இந்திய அளவில் 3வது இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இது இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கடும் கண்காணிப்பு இருந்த போது, கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி லோக்சபா தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்த சூழலில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பேர் 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள பாஜக எம்.எல்.ஏவும், நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றும் சதீஷ், நவீன், லாரி டிரைவர் பெருமாள் ஆகியோர் என்பது தெரியவந்தது. பிடிபட்ட சதீஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாஜக நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரனுக்காக அவர்கள் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவரான முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். நெல்லையிலும் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இது தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்ட போதும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்த நிலையில் வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதனையடுத்து தனியாக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக ரயிலில் பணத்துடன் பிடிபட்ட சதீஷ், நவீன் உள்ளிட்ட மூன்று பேரிடம் நேரில் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரனின் உறவினர் என சொல்லப்படும் முருகன் அவரிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி ஜெய்சங்கர் ஆகிய உடன் சிபிசிஐடி தலைமையகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த தகவல்களை வைத்து அடுத்த கட்டமாக பாஜக பிரமுகர் கோவர்தன் இடம் விசாரணை நடத்த இருக்கின்றனர். அவர் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் இருப்பதால் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியுமா என்பதை அறிய சிபிசிஐடி போலீசார் அவர் வீட்டுக்கு சென்றனர். இதைஅடுத்து அவரிடம் ஓரிரு தினங்களில் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. அவரிடம் பெரும் தகவல்களை வைத்து அடுத்த கட்டமாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.