“ஒடிசாவில் ஜூன் 4-ஆம் தேதி பிஜேடி அரசு காலாவதியாகப் போகிறது. இதையடுத்து நாங்கள் பாஜக சார்பில் முதல்வர் யார் என்று அறிவிப்போம். ஒடிசாவில் முதன்முறையாக பாஜக ஆட்சி அமையவிருக்கிறது” என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பெர்காம்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
ஜூன் 4-ஆம் தேதி பிஜேடி அரசு காலாவதியாக போகிறது. இதையடுத்து நாங்கள் பாஜக சார்பில் முதல்வர் யார் என்று அறிவிப்போம். ஜூன் 10-ஆம் தேதி பாஜக முதல்வரின் பதவியேற்பு விழா நடைபெறும்.
ஒடிசாவில் ஏராளமான நீர்வளம், வளமான கனிம வளங்கள், பரந்த கடற்கரை மற்றும் பெர்ஹாம்பூர் போன்ற வர்த்தக மையம் இருந்தபோதிலும், ஒடிசாவின் வளர்ச்சி பின்தங்கியுள்ளது, இது பட்டு நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒடிசா மாநிலத்துக்கு குறைந்த அளவு நிதியே ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஒடிசாவுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வளங்கள் நிறைந்த ஒடிசா மாநிலத்தின் மக்கள் ஏன் இன்னும் ஏழைகளாக இருக்கிறார்கள்? 50 ஆண்டுகள் இம்மாநிலத்தை ஆண்ட காங்கிரஸும், அடுத்த 25 ஆண்டுகள் இம்மாநிலத்தை ஆண்ட பிஜேடி கட்சியும் கொள்ளையடித்ததுதான் காரணம்.
ஒடிசாவில் ஜல் ஜீவன் மிஷனுக்காக மத்திய அரசு ரூ. 10,000 கோடியை ஒதுக்கியுள்ளது. இருப்பினும், பிஜேடியால் பணத்தை சரியாகச் செலவிட முடியவில்லை. ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டில் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச மருத்துவம் பெற்று வருகின்றனர். ஆனால், ஒடிசாவில் பிஜேடி அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. கர்ப்பிணி பெண்களுக்கு மத்திய அரசு ரூ.6,000 வழங்குகிறது. ஆனால், ஒடிசாவில் பிஜேடி அதை அமல்படுத்தவில்லை. நாங்கள் 5 கிலோ இலவச அரிசியை வழங்குகிறோம். ஆனால் பிஜேடி அரசாங்கம் தனது சின்னத்தை முத்திரை குத்தி சொந்தம் கொண்டாடி வருகிறது. பிஜேடி எப்பொழுதும் எங்களது திட்டங்களை அவர்களின் திட்டங்களாக சித்தரிக்கின்றன.
ஒடிசாவில் முதன்முறையாக பாஜக ஆட்சி அமையவிருக்கிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள், முதியோர்களின் ஆரோக்கியம், கலாச்சாரத்தைப் பாதுகாத்தல், சுற்றுலா, விவசாயிகள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவினருக்கு வேலை வாய்ப்புகள் வழங்குதல் ஆகியவற்றை இலக்காக கொண்டுள்ளோம். 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். ரூ.5 லட்சம் சுகாதாரப் பாதுகாப்புடன் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பாஜக செயல்படுத்தும். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவருக்கு நாட்டின் மிக உயரிய பதவியை வழங்கிய பெருமை பாஜகவுக்கு தான். குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் வழிகாட்டுதலின் கீழ் ஒடிசாவுக்கு என்னால் முடிந்ததை செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.
மோடியின் உரைக்கு பதிலளித்த நவீன் பட்நாயக், “பாஜக நீண்ட காலமாக ஆட்சிக்கு வர வேண்டும் என்று பகல் கனவு காண்கிறது” என்றார். மேலும் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் பாண்டியன் கூறுகையில், “நவீன் பட்நாயக் ஆறாவது முறையாக ஜூன் 9-ஆம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார்” என்றார்.