டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள கேசிஆர் மகளும் எம்எல்ஏசியுமான கவிதாவுக்கு, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்திருக்கிறது.
டெல்லி புதிய மதுபான கொள்கையில் முறைகேடு செய்திருப்பதாக கவிதா மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. இது குறித்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், ஓரிரு முறை மட்டுமே ஆஜரான கவிதா, பல முறை சம்மன்களை ஸ்கிப் செய்திருந்தார். இதையடுத்து கடந்த மார்ச் 15ம் தேதி ஹைதராபாத்தில் அவரது இல்லத்தில் சுமார் 5 மணி ரெய்டு நடத்தப்பட்டு கவிதாவை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். ஏற்கெனவே இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கவிதாவின் கைது சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. முதலில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட கவிதா, பின்னர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் திஹார் சிறையில் இருக்கும்போதே, கலால் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கவிதாவை கைது செய்தது. பின்னர், 3 நாட்கள் விசாரணைக்காக ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்தது. இந்த அனுமதியையடுத்து கவிதா சிபிஐயால் விசாரிக்கப்பட்டார். விசாரணைக்கு பின்னர் அவர் மீண்டும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரை மே 7ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தனக்கு ஜாமீன் கேட்டு கவிதா தாக்கல் செய்திருந்த மனுவை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு நீதிபதி காவேரி பவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜராகியிருந்த வழங்கறிஞர், தாங்கள் கைப்பற்றிய ஆதாரங்களை சமர்பித்து கவிதாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜாமீன் வழங்கப்படக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தனர். இதனையடுத்து கவிதாவின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.