சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நிவாரணம் கோரிய தமிழ்நாடு அரசின் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு செய்துள்ள நிலையில் மனுவின் விவரங்களை மின்னஞ்சல் செய்ய தலைமை நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டின் கோரிக்கையான சுமார் 38,000 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதியை தாமதப்படுத்தியதன் மூலம், மாநில மக்களை மாற்றாந்தாய் போல் மத்திய அரசு நடத்துவதாகக் குற்றம் சாட்டி தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள இரட்டைப் பேரிடர்களால் மக்களுக்கு உதவ, மத்திய அரசு இன்னும் பேரிடர் நிவாரண நிதியை மாநிலத்திற்கு வழங்கவில்லை என்று இன்று நடந்த விசாரணையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு தெரிவித்தது. தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். அவர் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரினர்.
தேசிய பேரிடர் நிவாரண நிதி தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை அணுகிய பின்னரே வெள்ள நிவாரணத்தை மத்திய அரசு அறிவிக்கிறது. கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு நாங்கள் கோர்ட்டுக்கு சென்ற பின்பே வழங்குகிறது. முதல்வர் மு.க., கோரும் பேரிடர் நிவாரண நிதியான 38,000 கோடி ரூபாய் வழங்காமல் காலம் தாழ்த்தி, மாநில மக்களை மாற்றாந்தாய் போல் நடத்தும் மத்திய அரசுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வறட்சி நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசின் தாமதம் குறித்து கர்நாடகாவும் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக வில்சன் வாதம் வைத்து இருந்தார்.
கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கில், கடந்த ஏப்ரல் 29 அன்று, அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, கர்நாடக மாநிலத்தின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கர்நாடகாவுக்கு ₹3400 கோடிக்கு மேல் மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார். இந்த வழக்கு நீதிபதி பி.ஆர்., தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அன்றைய விசாரணை முடிந்த நிலையில் வழக்கு கோடை விடுமுறைக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டது.
முன்கூட்டிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கையை ஆலோசனை செய்வதாக இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் உறுதியளித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு செய்துள்ள நிலையில் மனுவின் விவரங்களை மின்னஞ்சல் செய்ய தலைமை நீதிபதி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின் வழக்கில், “மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், நிதி வெளியீட்டில் வித்தியாசமாக நடத்தப்படுவது வர்க்கப் பாகுபாட்டிற்கு சமம். பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதிக கஷ்டங்கள் மற்றும் ஈடுசெய்ய முடியாத இழப்புகளை எதிர்கொண்டவர்களின் அடிப்படை உரிமைகளை இது மீறுகிறது. இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையானது தேசிய பேரிடர் மேலாண்மைக் கொள்கைக்கே எதிராக உள்ளது., மத்திய நிதி உறவுகள் மற்றும் வரிப் பிரிவின் கூட்டாட்சி தத்துவமே இங்கு உடைத்து நொறுக்கப்பட்டு உள்ளது. சில மாநிலங்களுக்கு நியாயமற்ற முறையில் நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் மக்களின் உரிமை மீறப்படுகிறது. இது தமிழ்நாட்டு மக்களின் அடுப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளது என்று தமிழ்நாடு அரசின் வாதத்தில் கூறப்பட்டு உள்ளது.