ரூ.4 கோடி வழக்கில் பாஜக பிரமுகரின் சென்னை வீடு, ஹோட்டலில் சிபிசிஐடி சோதனை!

லோக்சபா தேர்தல் சமயத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கியது. இது நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் தான் சிபிசிஐடி போலீசார் சென்னையில் உள்ள பாஜக பிரமுகர் வீடு, ஹோட்டலில் 6 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். அதோடு பாஜக பிரமுகர் கோவர்தனன் மற்றும் அவரது மகனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் நெல்லை பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தான் கடந்த மாதம் 6ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நடந்த சோதனையில் சென்னை – நெல்லை ரயிலில் ரூ. 4 கோடி சிக்கியது. இந்த வழக்கில் சதீஷ், சதீஷின் நண்பர் பெருமாள் மற்றும் நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ரூ.4 கோடி பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பணத்தை சென்னையில் இருந்து நெல்லைக்கு கொண்டு செல்லும்படி நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் கூறியதாக அவர்கள் சிலரது பெயர்களை தெரிவித்தனர். இதையடுத்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்தனர். அதன்பிறகு இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிசிஐடி போலீசார், தாம்பரம் போலீசாரிடம் வழக்கு ஆவணங்களை பறிமுதல் செய்து தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்களாக கூறப்படும் 10 பேருக்கு சம்மன் அனுப்பி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் பாஜக பிரமுகர் கோவர்தனின் வீடு மற்றும் ஹோட்டலில் சிபிசிஐடி போலீசார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை நீலாங்கரையில் உள்ள கோவர்தனின் வீடு மற்றும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஹோட்டல் ஆகியவற்றில் காலை 11 மணிக்கு சிபிசிஐடி போலீசார் சோதனையை தொடங்கினர். இந்த சோதனை 6 மணிநேரத்தை கடந்தும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அதாவது கோவர்தனன் பாஜக பிரமுகராக உள்ளார். இவரது ஹோட்டலில் இருந்து தான் பணம் கைமாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோவர்தனனை விசாரணைக்கு ஆஜராகக்கோரி சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவருக்கு உடல்நலம் சரியில்லை. இதனால் அவர் வீட்டில் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில் தான் இன்று நேரடியாக சிபிசிஐடி போலீசார் அவரது வீடு மற்றும் ஹோட்டலுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும் வீட்டில் சிகிச்சையில் உள்ள கோவர்தனன் மற்றும் அவரது மகன் கிசோர் குமார் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். இந்த வழக்கு தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கில் தொடர்பு உள்ளவர்களாக கருதப்படும் நபர்களின் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு விசாரணைக்கு அழைத்து வருகின்றனர். தற்போது வரை 10 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் தொடர்ச்சியாக தான் நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.