நீட் தேர்வு போலி மருத்துவர்களை தான் உருவாக்குகிறது: சீமான்!

இந்தியாவில் நடத்தப்படும் மருத்துவ நுழைவு தேர்வை அமெரிக்க நிறுவனம் ஏன் நடத்த வேண்டும், இந்தியாவில் நிறுவனங்களே இல்லையா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆதம் பாவா இயக்கத்தில் அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கவின் நடித்துள்ள ஸ்டார், சந்தானம் நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு போன்ற படங்களுடன் போட்டியாக உயிர் தமிழுக்கு திரைப்படமும் வெளியாகிறது. ஜாபர் சாதிக் தயாரிப்பில் அமீர் நடித்த இறைவன் மிகப்பெரியவன் திரைப்படம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமீர் நடிப்பில் உருவாகியுள்ள உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் பிரத்தியேக காட்சியை பார்த்த சீமான் படம் அருமையாக வந்துள்ளது என்றும் நிச்சயம் மக்களுக்கு தேவையான அரசியல் கருத்துக்களை நகைச்சுவையுடன் கூடிய நையாண்டி தனமாக உருவாக்கியுள்ளனர் எனக் கூறியுள்ளார்.

வைரமுத்து மற்றும் இளையராஜா இடையே நடைபெற்று வரும் மோதல் குறித்த கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பிய நிலையில், கல்வியா வீரமா செல்வமா? என மறுபடியும் சரஸ்வதி சபதம் படம் தான் எடுக்க வேண்டும் என்றும் இயல், இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என அப்போதே பாடி விட்டனர். இசையும் மொழியும் சேர்ந்ததுதான் பாடல். அதை மறுக்கவே முடியாது. இது இரண்டு தகப்பன்களுக்கு இடையேயான பிரச்சனை. இதற்கு இடையே எங்களை கோர்த்து விடாதீங்க, அவர்கள் இதுதொடர்பாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இளையராஜா அப்பா கேட்கும் காப்புரிமை கோரிக்கை என்பது நியாயமான ஒன்று, அதை புரியாமல் பலரும் அவரை விமர்சிப்பது தவறான செயல் எனக் கூறியுள்ளார் சீமான்.

நீட் தேர்வு குறித்து காட்டமான கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய சீமான், “நீட் தேர்வு போலி மருத்துவர்களை தான் உருவாக்குகிறது. நீட் தேர்வில் முறைகேடு செய்து சமீபத்தில் கூட 50-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர் சிக்கினர். அப்போ நீங்கள் போலி மருத்துவர்களை உருவாக்குகின்றீர்களா? தரமான மருத்துவர்களை உருவாக்குகின்றீர்களா? இந்தியாவில் நடத்தப்படும் மருத்துவ நுழைவு தேர்வை அமெரிக்க நிறுவனம் ஏன் நடத்த வேண்டும், இந்தியாவில் நிறுவனங்களே இல்லையா? வடமாநிலத்தில் எந்த பெண்ணும் தோடு, மூக்குத்தியை கழற்ற வைக்கப்படவில்லை. என் மாநிலத்தில் மட்டுமே தோடு, மூக்குத்தி என எல்லாவற்றையும் கழற்ற வைக்கின்றீர்கள். மூக்குத்தியில் பிட் வைக்க முடியும் என்று சொல்லும் நீங்கள் தான் இ.வி.எம். இயந்திரத்தை எதுவும் செய்ய முடியாது என சொல்கின்றீர்கள்” என்று தெரிவித்தார்.