கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை அடுத்த வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது!

“சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டால், அவர் தனது அலுவல் பணிகளைச் செய்ய முடியாது. அது அடுக்கடுக்கான விளைவுகளை ஏற்படுத்தலாம்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், இடைக்கால ஜாமீன் குறித்த விசாரணையை மே 9-ம் அல்லது அடுத்த வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தற்போது திஹார் சிறையில் நீதிமன்றக் காவலில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், தான் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் ஏப்ரல் 9-ம் தேதி ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அடங்கி அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (மே 3) நடந்த வழக்கு விசாரணையின்போது, இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்கும்படி, அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின்போது உச்ச நீதிமன்ற அமர்வு, கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியிடம், “கெஜ்ரிவால் இடைக்கால ஜமீனில் விடுவிக்கப்பட்டால் அவர் முதல்வர் அலுவலகம் செல்வாரா, கோப்புகளில் கையெழுத்திடுவாரா, மற்றவர்களுக்கு உத்தரவுகள் வழங்குவாரா?” என்று கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த அபிஷேக் மனு சிங்வி, “அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கைகளை கையாளமாட்டார். அவர் தற்போதும் மாநிலத்தின் முதல்வர்” என்று தெரிவித்தார்.

அதற்கு நீதிமன்ற அமர்வு, “அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் விடுவிக்க நாங்கள் முடிவு செய்தால் நீங்கள் அலுவல் பணிகளைச் செய்ய விரும்பவில்லை என்பதை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அது அடுக்கடுக்கான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தனர்.

மேலும், “நாங்கள் அரசாங்க அலுவல்களில் தலையிடுவதை விரும்பவில்லை. முதல்வராக நீடிக்க வேண்டும் என்பதே உங்களின் விருப்பம். இன்று இது சட்டப்பூர்வ பிரச்சினை இல்லை. உரிமைப் பிரச்சினை. தேர்தல் காரணமாகவே நாங்கள் இடைக்கால ஜாமீனை விசாரணை செய்கிறோம். மற்றபடி இதனை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டோம்” என்று கூறி, மதியம் 2.30 மணிக்கு இதனை விசாரிப்பதாக தெரிவித்தனர்.

மதியம் விசாரணையின்போது, நீதிமன்ற அமர்வு, “கெஜ்ரிவாலின் வழக்கை எப்போது விசாரிக்க முடியும் என்று பார்க்கலாம். நாங்கள் ஒரு முடிவுக்கு வந்த பின்பு உங்களிடம் அதுகுறித்து தெரிவிப்போம். தற்காலிகமாக இந்த விவகாரம் நாளை மறுநாள் (மே 9) அல்லது அடுத்த வாரத்தில் பட்டியிலிடப்படலாம்” என்று தெரிவித்தது.