மும்பை தாக்குதலில் கர்கரேவை கொன்றது தீவிரவாதியா?: சசி தரூர்!

மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஐபிஎஸ் அதிகாரி கர்கரே மரணமடைந்திருந்த நிலையில், இது தொடர்பாகத் தீவிர விசாரணையை நடத்த வேண்டும் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.

நமது நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி மகாராஷ்டிராவில் நடந்த பிரச்சார கூட்டம் ஒன்றில் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான விஜய் நாம்தேவ்ராவ் வடேட்டிவார் பேசிய கருத்துகள் பேசுபொருள் ஆனது. அதாவது கடந்த 2008இல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது பாதுகாப்பு அதிகாரிகள் பலர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். அப்படி அந்த மோதலில் உயிர்நீத்தவர்களில் முக்கியமானவர் மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையின் முன்னாள் தலைவர் ஹேமந்த் கர்கரே. இவர் மும்பை தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கிடையே கர்கரேவை கொன்றது பயங்கரவாதி அஜ்மல் கசாப் இல்லை.. ஆர்எஸ்எஸ் மீது பற்றுள்ள காவலர் ஒருவரே கர்கரேவை கொன்றதாக கூறியது பேசுபொருள் ஆனது. அதாவது அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “மும்பை போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேவைக் கொன்ற தோட்டா கசாப்பின் துப்பாக்கியிலிருந்து வந்தது இல்லை. மாறாக அது ஆர்எஸ்எஸ் மீது பற்று கொண்ட இருந்த ஒரு போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியில் இருந்து வந்தது.. இந்த உண்மையை நீதிமன்றத்தில் மறைத்தவர் தான் அப்போது அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்த உஜ்வல் நிகம்.. அவருக்குத் தான் இப்போது பாஜக மும்பை நார்த் சென்டரல் தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்துள்ளது.. பாஜக ஏன் இதுபோன்ற துரோகிகளை ஆதரிக்கிறது என்று புரியவில்லை” என்று கூறியிருந்தார்.

அவரது இந்தப் பேச்சு இணையத்தில் பேசுபொருள் ஆனது. இதையடுத்து விஜய் வடேட்டிவார் தனது பேச்சு குறித்து விளக்கமளித்தார். அதாவது இது தன்னுடைய சொந்த கருத்து இல்லை என்றும் முன்னாள் காவல்துறை அதிகாரி எஸ்.எம்.முஷ்ரிப்பின் புத்தகத்தில் இருந்து மேற்கோள் மட்டுமே காட்டியதாக வடேட்டிவார் தெரிவித்தார். அதேநேரம் பாஜக தரப்பில் இதற்குக் கடுமையான பதிலடிகளும் வந்தன. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விஷயத்தை மிகவும் தீவிரமானது என்று கூறிய சதி தரூர், “மகாராஷ்டிர எதிர்க்கட்சி தலைவர் விஜய் கூறியுள்ள இந்த குற்றச்சாட்டு முக்கியமானது. ஏனென்றால் அவர் முன்னாள் காவல்துறை ஐஜி எஸ்எம் முஷ்ரிப்பின் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கருத்தைத் தான் எழுப்பி இருக்கிறார். கர்கரேவின் உடலில் கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்களை அஜ்மல் கசாப் சுட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் அது போலீஸ் ஒருவரின் துப்பாக்கியில் இருந்து வந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்று முஷ்ரிப் கூறியிருந்தார்.. இந்தக் குற்றச்சாட்டைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று சசி தரூர் தெரிவித்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஐபிஎஸ் அதிகாரியான கர்கரே பணியில் இருந்தபோது கொல்லப்பட்டார். இந்த பயங்கரவாத தாக்குதலில் அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டார். அவர் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2012இல் அவர் புனேவில் தூக்கிலிடப்பட்டார்.