16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? முழு பூசணியை சோற்றில் மறைக்குறீங்களே: அன்புமணி!

தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் சீராக வழங்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டிற்கு பதில் கொடுத்திருந்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. இந்நிலையில், அமைச்சரை விமர்சித்து தமிழநாட்டு அரசுக்கு சவால் விடுத்து இருக்கிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகப்படியான வெயிலினால் மின்சாரத்தின் பயன்பாடும் அதிகரித்து இருக்கிறது. எனவே சில இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. அத்துடன் மின் தட்டுப்பாட்டை சரிகட்டும் விதமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் குறைவான நேரமே வழங்கப்படுவதாக புகார்கள் எழுகின்றன.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக தமிழக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலறிக்கை வெளியிட்டுள்ளார். மனிதவள மேம்பாட்டுத்துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் தடையின்றி மின் விநோயோகம் செய்யப்படுவதாகவும் 2021ல் இருந்து நாள் ஒன்றிற்கு 12 முதல் 16 மணி நேரம்வரை தமிழநாடு முழுவதும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்குவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இதனை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ். அதில் கூறியுள்ளதாவது:-

வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? மின் துறை அமைச்சர் நிரூபிக்கத் தயாரா? தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதாகவும், கிராமப்புறங்களில் உள்ள கடைமுனை நுகர்வோருக்கும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் தமிழக மின் துறை அமைச்சர் கூறியிருக்கிறார். இது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். அமைச்சரின் கூற்றில் சிறிதும் உண்மையில்லை.

மின் துறை அமைச்சரின் அறிக்கை வெளியான பிறகு காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்கள் பலரை தொடர்பு கொண்டு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறதா? என்று விசாரித்தேன். கடந்த காலங்களில் இருந்த அதே நிலைமை தான் இப்போதும் நீடிப்பதாகவும், தொடர்ச்சியாக 3 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் வழங்கப்பட வில்லை என்றும் உழவர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, தமிழகத்தின் பெரும்பான்மையான கிராமப்பகுதிகளில் மின்னழுத்தக் குறைபாடு தொடர்கிறது. பல இடங்களில் 150 முதல் 160 வோல்ட் மின்சாரம் மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதனால் பல மின்சாதனங்களை இயக்க முடியவில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மின் துறை அமைச்சரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் உண்மை என்றால், தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களில் எந்தெந்த பகுதிகளில், எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை விவசாயத்திற்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்; அந்த அறிக்கையை வெளியிட்ட பிறகு அந்தந்த பகுதிகளில் உள்ள உழவர்களிடம் வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மை தானா? என்பதை கேட்டறியும் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதற்கு தமிழக அரசு தயாரா?

தமிழகத்தின் தலைநகரான சென்னையின் அதிகபட்ச மின் தேவை 4590 மெகாவாட்டாக அதிகரித்திருக்கிறது. சென்னையின் மின் தேவையை நிறைவேற்றும் அளவுக்குக்கூட மின்னுற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு அடையவில்லை என்பது தான் உண்மை. எனவே, தமிழகம் சிறப்பாக உள்ளது, செழிப்பாக உள்ளது என்பன போன்ற பொய் பிம்பங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதை விடுத்து தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டு 17 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள 17,340 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்திட்டங்களை போர்க்கால வேகத்தில் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.