கர்நாடக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பெண்ணைக் கடத்திய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடா மகனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவுமான ஹெச்.டி.ரேவண்ணாவை மே 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண்ணைக் கடத்தியதாக கே.ஆர் நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரை மே 8-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. போலீஸ் காவல் இன்று புதன்கிழமை நிறைவடைந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் ரேவண்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரது காவலை நீட்டிக்கும்படி எஸ்ஐடி வேண்டுகோள் விடுத்தது. அதனைத் தொடர்ந்து, ரேவண்ணாவை மே 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகனும், மஜதவின் மூத்த தலைவருமான ரேவண்ணா கர்நாடக மாநிலம், ஹொலேநர்சிப்புரா தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். அவரது மகனும், ஹாசன் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் மீண்டும் களமிறங்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 26-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், பிரஜ்வல் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதைத் தொடர்ந்து 48 வயதான வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 3 பெண்கள் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது தந்தை ரேவண்ணா மீதும், வீட்டு பணிப்பெண் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்ததால் அவர் மீதும் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, புகார் அளித்த பெண்ணை கடத்தியதாக ரேவண்ணா மீதும் அவரது உதவியாளர் சதீஷ் பாவண்ணா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சிறப்பு புலனாய்வு குழு போலீஸார், தேவகவுடாவின் வீட்டில் இருந்த ரேவண்ணாவை மாலை 7 மணிக்கு கைது செய்தனர். இதனிடையே, ஜெர்மனிக்கு தப்பியோடியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்கும் முயற்சியில் சிறப்பு போலீஸார் இறங்கியுள்ளனர். அவருக்கு 2 முறை லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர். அதேபோல் அவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.