அன்புள்ள சாம் பிட்ரோடா, நான் ஒரு கருப்பு பாரதியன்: அண்ணாமலை!

காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

காங்கிரஸ் கட்சியின் ஓவர்சீஸ் தலைவராக இருப்பவர் சாம் பிட்ரோடா. இவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ ஆலோசகராக இருந்தவர். அண்மையில் வாரிசு சொத்துரிமை தொடர்பாக அமெரிக்காவில் உள்ள சட்டம் பற்றி சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து, மக்களவைத் தேர்தல் பிரச்சார மேடைகளில் பாஜகவால் பெரும் விவாதமாக எழுப்பப்பட்டது. சாம் பிட்ரோடாவின் கருத்தை முன்வைத்து, ‘நீங்கள் இறந்த பிறகு காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து சொத்துகளை பறித்து வேறு ஒருவருக்கு வழங்கப் பார்க்கிறது, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் உங்களிடம் 2 எருமை மாடுகள் இருந்தால் கூட ஒன்றை பறித்துக் கொள்வார்கள்’ என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் பிரச்சாரம் செய்தனர்.

தற்போது இந்தியாவின் பன்முகத் தன்மையை விளக்கும் வகையில் சாம் பிட்ரோடா, அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அப்போது “இந்தியாவைப் போன்ற பல்வேறு தரப்பினர் வாழும் தேசத்தை நாம் சிறப்பாக வைத்திருக்க முடியும். இந்தியாவின் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கே உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் தோற்றம் அளிக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் ஒரு பொருட்டல்ல, நாங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியர்கள் 75 வருடங்கள் மிகவும் மகிழ்ச்சியான சூழலில் வாழ்ந்தார்கள். அங்கும் இங்கும் சில சண்டைகள் எழுந்தாலும், அதனை புறந்தள்ளி மக்கள் ஒன்றாக வாழ்கிறார்கள். இதுதான் நான் நம்பும் இந்தியா. அங்கு அனைவருக்கும் ஒரு இடம் உள்ளது. மக்கள் எல்லோருமே கொஞ்சமேனும் சமரசம் செய்கிறார்கள்” என்று பேசி இருந்தார் சாம் பிட்ரோடா.

சாம் பிட்ரோடாவின் இந்தப் பேச்சை குறிப்பிட்டு பாஜகவினர் கடும் விமர்சனங்களைச் செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி சாம் பிட்ரோடா கருத்தை விமர்சித்துள்ளார். “ராகுல் காந்தி இதற்கு பதிலளிக்க வேண்டும். எனது நாட்டு மக்களை அவர்களின் தோல் நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதை எனது நாடு பொறுத்துக் கொள்ளாது” என்று கூறியுள்ளார்.

சாம் பிட்ரோடா பேச்சின் குறிப்பிட்ட பகுதியை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “இந்தியா ஆக்கிரமிப்பாளர்களின் நாடு என்றும் தனக்கென்று தனித்துவம் இல்லை என்றும் காங்கிரஸ் கட்சி நம்புகிறது. துரதிர்ஷ்டவசமாக, இதுதான் காங்கிரஸ் தலைவர்கள், அவர்களின் சந்ததியினர் மற்றும் வழிகாட்டிகளின் சிந்தனை செயல்முறை. அமெரிக்காவில் அமர்ந்திருக்கும் வழிகாட்டியைக் கொண்ட ஒரு கட்சியில் இருந்து நாம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாலும், முட்டாள்களின் சாம்பியனாலும் நடத்தப்படும் கட்சி காங்கிரஸ்” என காட்டமாக விமர்சித்துள்ளார் அண்ணாமலை.

மேலும் மற்றொரு பதிவில், தனது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அண்ணாமலை, “அன்புள்ள சாம் பிட்ரோடா, நான் ஒரு கருப்பு பாரதியன் (இந்தியன்)” என #ProudBharatiya எனும் ஹேஷ் டேக் உடன் பதிவிட்டுள்ளார்.