தேசத் துரோகிகள் என்று தாங்கள் அழைக்கப்படுவதை மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிடும் தனது சகோதரர் ராகுல் காந்திக்காக பிரியங்கா காந்தி வதேரா தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று ரேபரேலியில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
நாட்டை வளர்ச்சிப் பாதையில் காங்கிரஸ் கட்சி கொண்டு சென்றது. ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசோ மக்களை நசுக்குகிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தால் இளைஞர்கள் அவதிப்படுகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தோல்வி கண்டபோது அவர் கோபம் கொள்ளவில்லை. மாறாக அந்தத் தோல்வியிலிருந்து அவர் பாடம் கற்றுக்கொண்டார். அதற்காக அவர் வேறு ஒரு வழியைத் தேர்வு செய்து அதைப் பின்பற்றினார். அதன் பின்னர் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கண்டார் இந்திரா காந்தி.
நாடு சுதந்திரம் பெற பல்வேறு மக்கள் இயக்கங்களை மகாத்மா காந்தியும், நேருவும் நடத்தினர். இதனால் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. நமக்குப் பின் வரும் அரசுகள் நம்மை தேசத் துரோகிகள் என்று கூறும் என அவர்கள் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மோதிலால் நேருவும், ஜவஹர்லால் நேருவும் விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்திய இடம்தான் இன்றைய ரேபரேலி. அப்போது முதல் தற்போதைய தேர்தல் வரை ரேபரேலியில் ஜனநாயகமும், உண்மையும் ஒரு பக்கத்தில் இருக்கின்றன. எதிர்ப்பக்கத்தில் அனைத்துக்கும் மேலானவர்கள் நாங்கள்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிற தீவிர அரசியல் கூட்டம் நிற்கிறது. இந்தப் போட்டியில் உண்மைக்கும், ஜனநாயகக் கொள்கைகளுக்கும் வெற்றி தேடித் தரவேண்டிய பொறுப்பு மக்களாகிய உங்களுக்கு உள்ளது.
ரேபரேலியில் எனது தாயார் சோனியா காந்தி 20 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்தார். இந்த ரேபரேலி மண்ணில் எனது குடும்பத்தில் உள்ளவர்களின் ரத்தமும் கலந்துள்ளது. உங்கள் முன்னோர்கள் தியாகம் செய்த இந்த புனித பூமியில் நியாயத்தின் பக்கம் நீங்கள் வெற்றி தேடித் தரவேண்டும். இங்கு அதிக பலத்துடன் நாம் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும். அதேபோல் அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவையும் மக்கள் வெற்றி பெறச் செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.