மோடி மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்வப் பெருந்தகை வழக்கு!

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் பிரதமர் மோடி மீது இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.செல்வம்பெருந்தகை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

நடைபெற்று வரும் நாடாளுமன்றத் பொதுத் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக நடத்தவில்லை. மத்தியில் உள்ள ஆளும்கட்சியின் விருப்பத்தின்படியே தேர்தலை நடத்துகிறது. உதாரணத்துக்கு தேர்தல் அறிவிப்புக்கு 2 நாட்களுக்கு முன்புதான் புதிய தேர்தல் ஆணையர்களை, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு நியமித்துள்ளது. நேர்மையான, வெளிப்படையான தேர்தல் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும். ஆனால், தேர்தலில் வெற்றிப் பெற மாட்டோம் என்ற பயத்தின் காரணமாக ஆளும் பா.ஜ.க.,வினர், நம் நாட்டை இந்து தேசம் என்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி பேசும்போது, முஸ்லீம்கள் நாட்டில் ஊடுருவிகள் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்கள் என்றும் இந்துகளின் வளம் எல்லாம் முஸ்லீம்களுக்கு சென்று விடுகிறது என்றெல்லாம் பேசியுள்ளார். இதுபோல குஜராத் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்திலும் பேசியுள்ளார். இதுகுறித்து ஏராளமான புகார்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கபட்டுள்ளது. ஆனால், மோடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மென்மை போக்கை கடை பிடிக்கிறது.

பா.ஜ.க., தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் மட்டும் அனுப்புகிறது. எனவே, மோடியின் இந்த பேச்சுக்கு எதிராக நான் கடந்த 1-ந்தேதி அளித்த புகாரின் அடிப்படையில், மத நல்லிணக்கத்துக்கு எதிராக பேசும் மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், மேற்கொண்டு இதுபோல பேசுவதை தடுக்கவும், தேர்தலை நேர்மையாக நடத்தவும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, கலைமதி ஆகியோர் முன்பு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் சூர்யபிரகாஷ் மற்றும் விக்டர் ஆஜராகி கோரிக்கை விடுத்தனர். அப்போது, பிரதமருக்கு எதிரான இந்த வழக்கை, உயர்நீதிமன்ற பதிவுத்துறை ஏற்றுக் கொள்ள மறுப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதனையடுத்து உரிய திருத்தங்களுடன் புதிய மனுவைத் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.