தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்: வானதி சீனிவாசன்!

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவான பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசனின் ஆபிஸ் வளாகத்தில், குவாட்டர் மதுபாட்டில்கள் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் வானதி சீனிவாசன்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு அவர் பதில் அளித்து பேசினார்.

முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், முத்திரைத்தாள் மட்டுமல்ல.. சொத்து வரி, குடிநீர் வரி, கரெண்ட் பில் என எல்லாவற்றையும் ஏற்றிவிட்டார்கள். இந்த அரசாங்கம் உயர்த்தாத ஏரியாவை சொல்லுங்கள்.. டாஸ்மாக்கில் கூட ரேட்டை எல்லாம் ஏற்றிவிட்டதாக சொல்லுகிறார்கள் என்றார்.

அப்போது செய்தியாளர் 3 ஆண்டு திமுகஆட்சி குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.. சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் படுமோசமாக போய்கொண்டிருக்கிறது.. எந்த பிரச்சனையும் கண்டுகொள்வது இல்லை.. மாநகராட்சியில் குப்பை எடுக்க மாட்டீங்குறாங்க.. மக்களின் அன்றாடப் பிரச்சனைகளில கவனம் செலுத்தவில்லை.. இதுதவிர மாநிலத்தின் முதல்வர் அவ்வப்போது வாக்கிங் போகிறார். அவ்வப்போது சினிமா பார்த்தீங்களா என்று கேட்கிறார்.. அப்பப்ப அவருடைய பையனின் வருங்காலத்தை உறுதி செய்கிறார்கள்.. அந்த முதல் குடும்பம் பணம் சம்பாதிப்பதை பார்த்து மாநிலத்தின் அமைச்சரே போனில் பேசுகிறார்.. இதுதான் இவர்களின் 3 வருட சாதனை..

தொடர்ந்து மற்றொரு செய்தியாளர் தெருநாய்கள் தொல்லை குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் கோவையில் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிகழ்வுகளை குறிப்பிட்டும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து வானதி சீனிவாசன் பேசுகையில், சட்டசபையில் தெருநாய் பிரச்சனை குறித்து பேசினேன்.. அவர்கள் தெருநாயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார். இதில் மாநகராட்சியிடம் பேசினால் என்ன சொல்கிறார்கள் என்றால், தெருநாய்களை பிடித்துக் கொண்டு சென்று இனப்பெருக்க தடுப்பு சிகிச்சை செய்வதுடன், பின்னர் அவற்றை கொண்டு வந்துவிடுவோம் என்கிறார்கள்.. ஆனால் அந்த சிகிச்சை செய்வதற்கு வந்து அரசாங்கம் கொடுக்கும் பணம் போதவில்லை என்கிறார்கள்.. எனவே தெருநாய்களுக்கான இனப்பெருக்க தடுப்பு சிகிச்சைக்கான பணத்தை அதிகமாக கொடுக்க வேண்டும் என்று தான் கேட்க முடியும். தெருநாய்களுக்கு சாப்பாடு போடாதீங்க என்று சொல்லி போனால், விலங்கு ஆர்வலர்கள் வந்து நாயை பிடிக்கக்கூடாது என்று சண்டை போடுகிறார்கள்.. அதனால் அரசாங்கம் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இது மோசமான பிரச்சனை என்றார்.

தேர்தல் வெற்றி குறித்த கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், தேர்தல் வெற்றி பெற வாய்ப்பு பிரமாதமாக இருக்கிறது. தேர்தலுக்கு முன்னாடி ஒரு வார்த்தை, பின்னாடி ஒரு வார்த்தை பேச மாட்டேன்.. நாங்கள் ஜெயிக்க போகிறோம்.. கோயம்புத்தூரில் பிஜேபி ஜெயிக்க போகிறது.. தமிழ்நாட்டில் இரட்டை இலக்கத்தில் எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி ஜெயிக்கும் என்றார்.

இதனிடையே செய்தியாளர் சந்திப்பின் துவக்கத்தில் பாட்டில் எல்லாம் (கோவை தெற்கு தெகுகுதி சட்டமன்ற அலுவலக வளாகத்தில் ) உள்ளே இருக்கிறது பாருங்கள் என்று ஒரு செய்தியாளர், வானதி சீனிவாசனை பார்த்து கேள்வி எழுப்பினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வானதி சீனிவாசன், என்னங்க சொல்றீங்க.. எங்க ஆபிசுக்குள்ளயேவா.. என்ன தம்பி இது.. பாருங்க.. எம்எல்ஏ ஆபிஸை திறக்காமல் விட்டால்.. இப்படி எல்லாம் சமூக விரோதிகளே உள்ள வந்திடுறாங்க.. இன்னும் கொஞ்சம் நாள் போனால், ஆபிஸில் கஞ்சா விற்கிறேன் என்று சொன்னாலும் சொல்வாங்க போல.. என்று ஆதங்கத்துடன் பேசினார்.