ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது என்றும் அது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் மே மாதம் 24-ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை மொத்தம் 30 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆசிரியர்களை கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் செய்வது வரவேற்கத்தக்கது. ஆனால், அதில் கடைபிடிக்கப்படும் அணுகுமுறை மிகவும் தவறானதும், அநீதியானதும் ஆகும். ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் கடைபிடிக்கப்படும் அடிப்படை நடைமுறை, ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி விட்டு, அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது தான். இது தான் தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கம் ஆகும். ஆனால், 2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நடைமுறையை காற்றில் பறக்கவிட்டு, பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பாகவே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தும் புதிய நடைமுறையை புகுத்தியிருக்கிறது.
கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். பதவி உயர்வு பெறுபவர்களுக்கு, அந்த நேரத்தில் காலியாக உள்ள இடங்களில் அவர்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தான் விதி ஆகும். அது அவர்களின் உரிமை. அப்படி செய்வது தான் பணியிட மாறுதலில் குழப்பங்களைத் தடுக்கும்.
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் நேரடியாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப் பட்டால், அதற்கு முன் காலியாக உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விடும். அத்தகைய சூழலில் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்ய போதிய இடங்கள் இருக்காது. அதனால், விருப்பம் இல்லாமல், அதிகாரிகளால் ஒதுக்கப்படும் இடங்களில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதுமட்டுமின்றி, ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் போது அவர்கள் ஏற்கனவே வகித்து வந்த பணியிடம் காலியாகி விடும். அதனால், அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவார்கள்.
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல், பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதன் நோக்கமே, பணியிட மாறுதல் முடிவடைந்த பிறகு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் ஏற்படும் காலியிடங்களில் தங்களுக்கு வேண்டியவர்களை பணம் வாங்கிக் கொண்டு இடமாறுதலில் அமர்த்தலாம் என்பது தான் என்று குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. அந்தக் குற்றச்சாட்டுகளை புறந்தள்ளி விட முடியாது.
2021-ஆம் ஆண்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் காரணமே ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தான். அவர்களின் பணியிட மாறுதல் நடைமுறையில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறையை மாற்றுவது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். எனவே, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நடைமுறையை ரத்து செய்து விட்டு, பதவி உயர்வு வழங்க வேண்டிய ஆசிரியர்களுக்கு முதலில் பதவி உயர்வு வழங்கி விட்டு, அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்து ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.