என் கடைசி மூச்சு இருக்கும் வரை பகுஜன் சமாஜ் கொள்கைகளை நிலைநிறுத்தப் போராடுவேன் என்று மாயாவதியின் மருமகன் ஆகாஷ் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அண்மையில், தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தன்னுடைய அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்பப் பெறுவதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவித்தார். ஆகாஷ் ஆனந்த் அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை அவர் கட்சிப் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக மாயாவதி கூறினார்.
இந்நிலையில் அரசியல் வாரிசு இல்லை என்று அறிவிக்கப்பட்ட பின்னர் ஆகாஷ் ஆனந்த் முதன்முறையாக தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார் . இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் அவர், “பகுஜன் என்பது பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைக் குறிக்கும். உங்களுடைய போராட்டங்களினால் தான் இன்று அச்சமூகத்துக்கு அரசியல் வலிமை கிடைத்துள்ளது. அதனால் தான் பகுஜன் சமூகம் இன்று மரியாதையாக வாழ்கிறது. நீங்கள் ஒரு சர்வதேசத் தலைவர். நான் பகுஜன் சமாஜ் கட்சியின் பீம் மிஷன் கொள்கைக்கான போராட்டத்தை என் கடைசி மூச்சு வரை முன்னெடுப்பேன்.”என்று பதிவிட்டுள்ளார்.
மாயாவதியின் அண்ணன் ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த். லண்டனில் எம்பிஏ படித்தவர். கடந்த 2017-ல் உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் மாயாவதியுடன் இணைந்து செயல்பட்டார். 2019 மக்களவைத் தேர்தலின் போதும் கட்சியின் முக்கிய முகமாக ஆகாஷ் அறியப்பட்டார். கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். கடந்த டிசம்பரில் ஆகாஷை தனது அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்தார்.
இந்நிலையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் மாயாவதி வெளியிட்ட பதிவில், “பகுஜன் சமாஜ் ஒரு கட்சியாக மட்டுமின்றி பாபா சாகேப் அம்பேத்கரின் சுயமரியாதை மற்றும் சமூக மாற்றத்துக்கான இயக்கமாகவும் அறியப்படுகிறது. இதற்காக கன்ஷிராமும் நானும் எங்கள் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்துள்ளோம். ஒரு புதிய தலைமுறையும் அதற்கு வேகம் கொடுக்க தயாராகி வருகிறது. இந்த நோக்கத்துக்காக ஆகாஷ் ஆனந்தை தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் அரசியல் வாரிசாகவும் அறிவித்தேன். ஆனால் கட்சி மற்றும் இயக்கத்தின் நலன் கருதி, அவர் முழு முதிர்ச்சி அடையும் வரை இவ்விரு முக்கியப்பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். ஆகாஷின் தந்தை ஆனந்த் குமார், கட்சியிலும் இயக்கத்திலும் முன்புபோல் தனது பொறுப்புகளை தொடர்ந்து நிறைவேற்றுவார்” என்று கூறியிருந்தார்.