பிரதமர் மோடி தெரிவித்த கருத்து அப்பட்டமான இனவெறி: ப.சிதம்பரம்!

சாம் பிட்ரோடாவின் தோல் நிறம் ஒப்பீட்டுப் பேச்சு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து பொருத்தமற்றது என்றும், அது அப்பட்டமான இனவெறி என்றும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் தலைவராக இருந்த சாம் பிட்ரோடா அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவின் பன்முகத் தன்மையை பற்றி ஒப்புமைப்படுத்தி பேசும்போது தோல் நிறம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அவரது பேச்சு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தப் பேச்சு குறித்து காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியையும் அக்கட்சியையும் சாடியிருந்த பிரதமர் மோடி, “குடியரசுத் தலைவர் தேர்தலின்போது தற்போதைய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் கருப்பு நிறம் காரணமாகவே அவரை காங்கிரஸ் கட்சி தோற்கடிக்க முயன்றது என்று இப்போது புரிந்துகொள்ள முடிகிறது” என்று தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்தக் கருத்து குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்ஹா என இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் திரவுபதி முர்முவை ஆதரித்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரித்தன. வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பது அவரின் தோல் நிறத்தின் அடிப்படையில் இல்லை. அதேபோல் தோலின் நிறத்தின் அடிப்படையில் எந்த வேட்பாளரையும் எதிர்ப்பது இல்லை. ஒரு வேட்பாளரை ஆதரிப்தோ அல்லது எதிர்ப்பது என்பது அரசியல் முடிவாகும். மேலும், ஒவ்வொரு வாக்காளரும் அவரது கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டவர். தேர்தல் விவாதத்தில் தோலின் நிறத்தினை பிரதமர் மோடி கொண்டுவந்தது ஏன்? பிரதமரின் கருத்து முற்றிலும் பொருத்தமற்றது. அப்பட்டமான இனவெறி. இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.

முன்னதாக, சாம் பிட்ரோடா அளித்த பேட்டி ஒன்றில், “அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்த சண்டைகளைத் தவிர்த்து நாங்கள் அனைவரும் 75 ஆண்டு காலம் மகிழ்ச்சியான சூழ்நிலையில் வாழ்ந்திருக்கிறோம். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டை எங்களால் ஒற்றுமையாக வைத்திருக்க முடியும். கிழக்கில் உள்ள மக்கள் சீனர்களைப் போல தோற்றமளிக்கலாம், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடகில் உள்ள மக்கள் ஒருவேளை வெள்ளையர்கள் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் தோற்றமளிக்கலாம். அது ஒரு பெரிய விஷயம் இல்லை. நாங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள். வெவ்வேறு மொழிகள், மதங்கள், உடைகள், வெவ்வேறு உணவு பழக்க வழக்கங்களை நாங்கள் மதிக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார். பிட்ரோடாவின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.