காவல்துறை அதிகாரிகள், பெண்போலீஸார் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் மே 4-ம்தேதி கோவை சைபர் க்ரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை, கஞ்சா வழக்கில்ஆஜர்படுத்துவதற்காக தேனிபோலீஸார் நேற்று கோவைக்கு வந்து மத்திய சிறையில் இருந்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், மதுரை போதை பொருள்வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது சங்கர் வலது கையில் கட்டுப் போட்டிருந்தார். அவரிடம் நீதிபதி, ‘வழக்கு குறித்து என்ன சொல்கிறீர்கள்?’ என கேள்வி கேட்டார்.
அதற்கு சங்கர், ‘இது பொய்வழக்கு. கோவை சிறையில் என்னை போலீஸார் கடுமையான தாக்கினர். இதில் எனக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். கோவை சிறையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதனால் என்னை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும்’ என்றார்.
அதற்கு அரசு வழக்கறிஞர் தங்கேஸ்வரன், ‘மதுரை சிறையில் இடமில்லை’ என்றார். இதையடுத்து நீதிபதி, கோரிக்கை தொடர்பாக மனு அளித்தால் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறியதோடு, சங்கரை மே 22 வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்நிலையில் பெண் போலீஸாரை, சவுக்கு சங்கர் மற்றும் மற்றொரு யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் அவதூறாக பேசியதாக முசிறி டிஎஸ்பி யாஸ்மின் திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், சவுக்கு சங்கர்,பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய தடை விதிக்க கோரி சவுக்கு மீடியா நிறுவனத்தில் பணியாற்றும் விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கக் கூடாது என தடைவிதிக்கக் கோரி 3வது நபர் எப்படி மனுதாக்கல் செய்ய முடியும்? ஊகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி தள்ளுபடி செய்தார்.
இதேபோல் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி அவரது தாயார் கமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.கலைமதி ஆகியோர், இதுதொடர்பாக சவுக்கு சங்கர் காயம் அடைந்துள்ளாரா என்பது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு விசாரணை நடத்தி அந்த அறிக்கையை இன்று தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.