போதைப்பொருள் கடத்திலில் கைது செய்யப்பட்டுள்ள திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், அவர் எந்தெந்த நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தினார்? என்பது தொடர்பான பட்டியலை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.
சென்னையை சேர்ந்தவர் ஜாபர் சாதிக். இவர் திமுகவில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தார். இந்நிலையில் தான் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் ஜாபர் சாதிக் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜாபர் சாதிக் திமுவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோனில் அதிகாரிகள் சோதனை நடத்தி போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் சூடோபெட்ரின் என்ற பொருள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தான் ராஜஸ்தானில் பதுங்கிய ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அதேபோல் ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதானந்தம் என்பவரும் சென்னை தேனாம்பேட்டையில் கைது செய்யப்பட்டார். இவர்களை காவலில் எடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தான் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கைதான ஜாபர் சாதிக் உள்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகை தொடர்பான முக்கிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான் போதைப்பொருளை வெளிநாடுகளுக்கு கடத்தியதை ஜாபர் சாதிக் ஒப்புக்கொண்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜாபர் சாதிக் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளார். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு ஜாபர் சாதிக் போதைப்பொருட்கள் கடத்தியதை ஒப்பு கொண்டுள்ளார் மேலும் டெல்லியில் 3 பேர் கைதான நிலையில் பயந்துபோன ஜாபர் சாதிக் தனது 2 ஐபோன்களையும் சென்னை நேப்பியர் பாலத்திற்கு அருகே உடைத்து வீசியுள்ளார். ஆதாரங்களை அழிக்கும் வகையில் அவர் இப்படி செய்துள்ளார். இதனால் டெல்லியில் போதைப்பொருள் கடத்தியதாக முதலில் கைதான 3 பேருடன் ஜாபர் சாதிக் பேசியது தொடர்பாக குரல் மாதிரி தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வில் ஜாபர் சாதிக் 3 பேருடன் பேசியதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதை காட்டுகிறது.
இதுதவிர போதைப்பொருள் கடத்தல் மூலமாக வரும் பணத்தை ஜாபர் சாதிக் பீச் ஸ்டேஷனில் உள்ள பணம் பரிமாற்றம் செய்யும் எக்சேஞ்ச் நிறுவனம் மூலம் பணத்தை மாற்றம் செய்துள்ளார் என்பன போன்ற விபரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் வழக்கு தொடர்பாக வங்கி கணக்குகள், தயவியல் துறை ஆவணங்கள் என மொத்தம் 97 ஆவணங்கள் குற்றப்பத்திரிகையுடன் இணைக்கப்பட்டன. வழக்கில் 42 பேர் சாட்சியங்களாக குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.