சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தை அணுகி ஜாமீனை பெற்றுக்கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் அறிவிக்கப்பட்டது. 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை பொன்முடி இழந்தார். இதனால் அமைச்சர் பதவியையும் இழந்தார். இந்நிலையில், சென்னை ஐகோர்ட் விதித்த தீர்ப்பையும், தண்டனையையும் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்ததால் மீண்டும் எம்.எல்.ஏ பதவியைப் பெற்றார் பொன்முடி. இதையடுத்து பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் தமிழக ஆளுநர் ரவி.
ஏற்கனவே பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஜாமீன் பெற உச்சநீதிமன்றம் 30 நாட்கள் அவகாசம் அளித்திருந்தது. இந்நிலையில், இந்த அவகாசத்தை நீட்டிக்கக் கோரி பொன்முடி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று, ஜாமீன் பெறுவதற்கான கால அவகாசத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்துள்ளது சுப்ரீம் கோர்ட். சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி இருவரும் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பொன்முடி, அவரது மனைவிக்கு அளித்த தண்டனையை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே நிறுத்தி வைத்த நிலையில் ஜாமீன் பெறவும் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.