சந்திரபாபு முதல்வரான பிறகு வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும்: அன்புமணி

சந்திர பாபு நாயுடுவுக்கு ஆதரவாக ஆந்திர மாநிலத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுகிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 175 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம், ஜன சேனா, பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. மும்முனைப் போட்டி நிலவும் ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகின்றன. மே 13ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெற்று ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

ஆந்திர மாநிலத்தின் சில பகுதிகளில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனர். அவர்களது வாக்குகளை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸை அழைத்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவும் இடம்பெற்றுள்ளதால் உரிமையுடன் சந்திரபாபு அழைக்க அன்புமணியும் அங்கு சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து நேற்று வாக்கு சேகரித்தார்.

அப்போது குப்பத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

குப்பம் தொகுதியில் போட்டியிடக்கூடிய சந்திரபாபு ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஆந்திர மாநிலத்தின் முதல்வராக வரவேண்டும். ஒருங்கிணைந்த ஆந்திராவில் சந்திரபாபு செய்த வளர்ச்சி திட்டங்களால், தற்போது ஐதராபாத் சிறந்த நகரமாக மாறி உள்ளது. ஒரு காலத்தில் தவறு செய்யும் அதிகாரிகளை தமிழகத்தில் ராமநாதபுரத்திற்கு பணியிடம் மாற்றம் செய்வது, போன்று மிகவும் வறண்ட பகுதியாக குப்பம் தொகுதியும் இருந்தது.

சந்திரபாபுவின் 30 ஆண்டுகால அரசியல் அனுபவத்தால் தொடர்ந்து அவர் எம்எல்ஏவாக வெற்றி பெற்று இந்த தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளார். சந்திரபாபு, மோடி இருவரும் எனது நண்பர்கள். மோடியை எப்பொழுது வேண்டுமென்றாலும் நான் சந்திக்கலாம். சந்திரபாபுவிடம் எப்பொழுது வேண்டுமென்றாலும் போனில் பேசிக் கொள்ளலாம். கட்டாயம் ஆந்திராவில் சந்திரபாபு முதல்வரான பிறகு வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும். கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்த அழுத்தம் கொடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.