பூமியை தாக்கிய சூரிய புயல்: சாட்டிலைட் முடங்கும் அபாயம்!

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஒரு சூரிய புயல் பூமியைத் தாக்கியுள்ள நிலையில், இதனால் சாட்டிலைட் மற்றும் மின்சார கட்டமைப்புகள் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

நமது சூரியக் குடும்பத்தில் தொடர்ச்சியாகப் பல மாற்றங்கள் நடந்து வருகிறது. அவை நமது பூமியைப் பாதிக்க வாய்ப்பு இருப்பதால் நமது ஆய்வாளர்கள் தொடர்ந்து இது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையே சூரியினில் இருந்து கிளம்பியுள்ள புதிய சூரிய புயல் தொடர்பாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இது மின் சப்ளை பாதிப்பு தொடங்கி சாட்டிலைட் செயலிழப்புகளைக் கூட ஏற்படுத்துமாம். இது தொடர்பான முக்கிய தகவலை அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது. அதாவது சூரியனில் இருந்து வெளியாகும் CMEs எனப்படும் கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள் பூமியைத் தாக்கியுள்ளதாம்.

சூரியனில் இருந்து வெளியாகும் பிளாஸ்மா மற்றும் காந்தப்புலங்கள் தான் CMEs என்று அழைக்கப்படுகிறது. இந்திய நேரப்படி நேற்றிரவு இந்த பிளாாஸ்மா தாக்கியுள்ளது. இது பின்னர் தீவிர புவி காந்த புயலாக வலுவடைந்தது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தளவுக்கு ஒரு வலுவான சூரிய புயல் பூமியைத் தாக்குவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு கடைசியாக அக்டோபர் 2003இல் தான் இந்தளவுக்கு வலுவான சூரிய புயல் பூமியைத் தாக்கியிருந்தது. அப்போது அது ஸ்வீடன் முழுக்க மின்தடையை ஏற்படுத்தியது. மேலும் தென்னாப்பிரிக்காவிலும் மின்சார உள்கட்டமைப்பைச் சேதப்படுத்தியது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது முதல் சிஎம்இ தான் பூமியைத் தாக்கி உள்ளது. வரும் நாட்களில் இதேபோல பல கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள் பூமியைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சாட்டிலைட் செயல்பாடுகளையும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

கடந்த 2003இல் சாட்டிலைட் பெரியளவில் இல்லாத போதே பாதிப்புகள் கணிசமாக இருந்தது. இப்போது சாட்டிலைட் செயல்பாடுகள் அதிகமாக இருக்கும் நிலையில், பாதிப்புகள் மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள் பூமியைத் தாக்கிய போது அது வானிலை அழகிய அரோராக்களை ஏற்படுத்தி உள்ளது. இது வடக்கு ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் நன்கு தெரிந்த நிலையில், அது தொடர்பான படங்களை அங்குள்ள மக்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இது பார்க்க என்ன தான் அழகாக இருந்தாலும் நமது அன்றாட செயல்பாடுகளை இது பல வகையில் பாதிக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த சூரிய புயல்கள் பூமியின் காந்தப்புலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் இது குறித்து சாட்டிலைட் ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள் மற்றும் மின் நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சிஎம்இ நமது கிரகத்தை விட 17 மடங்கு அகலமான ஒரு பெரிய சூரிய புள்ளி கிளஸ்டரிலிருந்து வெளிப்பட்டன. பொதுவாகச் சூரியன் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை அதீத வெப்பமானதாக மாறும். அதன் பிறகு அதன் வெப்பம் சற்று குறையும். இந்த சூரிய 11 ஆண்டு சுழற்சி இப்போது உச்சத்தை நெருங்கி வரும் நிலையில், இதுபோன்ற செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிகழ்வால் சாட்டிலைட்களில் அதிக அளவு கதிர்வீச்சு ஏற்படும் ஆபத்தும் உள்ளன. இதனால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாசா தனியாக ஒரு டீமை இறக்கி உள்ளது. அதேநேரம் நமது பூமியின் வளிமண்டலம் இந்த சிஎம்இக்கள் பூமியை அடைவதைத் தடுத்துவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும், இது பயோ திசைக்காட்டிகளை உடலில் கொண்ட புறாக்கள் உள்ளிட்ட பறவைகளையும் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதனால் புறாக்கள் திசையைக் கண்டறிய முடியாமல் குழம்பி தாறுமாறாகப் பறக்கவும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஏற்கனவே இதுபோல புறாக்கள் குழம்பிப் போய் தாறுமாறாகப் பறப்பதை மக்கள் நோட் செய்துள்ளனர். அதேநேரம் இந்த நிகழ்வால் மனிதர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது.