“ஒப்பந்த செவிலியர்களாக மருத்துவ தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 1,912 எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் இன்று (மே 12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைக்கு உலக செவிலியர் தினம், செவிலியர்களின் முன்னோடியான பிளாரன்ஸ் நைட்டிங்கேளின் பிறந்தநாளான மே 12-ம் தேதி ஆண்டுதோறும் சர்வதேச செவிலியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான கருப்பொருளாக, செவிலியர்கள் தினத்தைப் பொறுத்தவரை ‘Our Nurses Our Future – The Economic Power of Care’ எனும் நோக்கத்தோடு செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நம்முடைய ‘தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின்’ நிர்வாகிகள் என்னை சந்தித்து, குறிப்பாக திமுக அரசு பொறுப்பேற்றதையடுத்து, செவிலியர்களுக்காக தொடர்ந்து தொண்டாற்றி வருகிற தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிற வகையில் தங்களுடைய வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. 90 சதவீதத்துக்கு மேலான கோரிக்கைகள் முழுமைப் பெற்றுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு 1,412 ஒப்பந்தச் செவிலியர்கள் பணியிலமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே ஒப்பந்த செவிலியர்களாக இருந்தவர்களுக்கு ரூ.16,000 சம்பளம் வழங்கப்பட்டிருந்தது. அது ரூ.18,000 சம்பளமாக உயர்த்தப்பட்டது. அதோடு மட்டுமல்லாது ஒப்பந்த செவிலியர்களாக மருத்துவ தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பல ஆண்டு காலமாக பணிநிரந்தரம் செய்யப்படாமல் இருந்தார்கள். திமுக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு 1,912 எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
‘மக்களைத்தேடி மருத்துவம்’ என்ற ஒரு மகத்தானத் திட்டம் தொடங்கப்பட்டதற்குப் பிறகு பெண் சுகாதார தன்னார்வலர்கள் 10,969 பேர் நியமிக்கப்பட்டார்கள். நியமிக்கப்பட்டதற்குப் பிறகு பகுதி நேரப் பணியாளர்கள் என்ற வகையில் அவர்களுக்கு சம்பளம் என்று சொல்வதைக் காட்டிலும் ஊக்கத் தொகை உயர்த்தப்பட்டு, ரூ.5,500 ரூபாய் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் அவர்கள் பயன்பெற்றிருக்கிறார்கள்.
செவிலியர்களின் பணியிடமாற்றம் என்பது பல ஆண்டுகளாக குழப்பமாக, குளறுபடியாக இருந்தது. அதற்குத் தீர்வு காண்கிற வகையில் திமுக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி கடந்த மூன்று ஆண்டுகளில் 9,535 செவிலியர்கள் கலந்தாய்வு மூலம் அவரவர்கள் விரும்புகிற பணியிடங்களுக்கு சென்றிருக்கிறார்கள். எம்.ஆர்.பி. மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிற பணி நியமனங்கள் வெளிப்படைத்தன்மையோடு நியமனம் செய்யப்படுகிறார்கள். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னாள் கிராம சுகாதார செவிலியர்கள், வி.எச்.என். 2,400 பேர் பணியமர்த்தப்படுகிற பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
செவிலியர் சங்கத்தின் சார்பில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே அவர்கள் தமிழக அரசுக்கு வைத்தக் கோரிக்கை சிறந்த செவிலியர்களுக்கு அவர்களை ஊக்கமளிக்கிற வகையில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை வைத்திருந்தார்கள். அந்த கோரிக்கையையும் தமிழக முதல்வர் நிறைவேற்றி இன்றைக்கு 19 செவிலியர்களுக்கு விருதுகள் வழங்குகிற தேர்வுக்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு அந்த விருதுகள் வழங்கப்படும்.
இன்றைக்கு செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகள் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இன்றைக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிற செவிலியர்கள் அனைவருக்கும் தமிழக முதல்வரின் சார்பில் செவிலியர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.