மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதா உள்பட 5 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், தெலுங்கானா மாநில முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா, கடந்த மார்ச் 15-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை டெல்லி தனிக்கோர்ட்டில் 200 பக்கங்கள் கொண்ட 7-வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், கவிதா, கோவா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியின் பிரசாரத்தை நிர்வகித்த ‘சேரியட் மீடியா’ நிறுவனத்தின் ஊழியர்களான தாமோதர் சர்மா, பிரின்ஸ் குமார், சான்பிரீத் சிங், ஒரு செய்தி சேனலின் முன்னாள் ஊழியர் அரவிந்த் சிங் ஆகிய 5 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மதுபான கொள்கை அமலாக்கத்தில் ஏராளமான ஆதாயங்கள் பெறுவதற்கு பிரதிபலனாக ஆம் ஆத்மி கட்சிக்கு கவிதா இடம்பெற்ற மதுபான வியாபாரிகள் குழுமம் ரூ.100 கோடி லஞ்சம் அளித்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. முறைகேடு மூலம் ரூ.292 கோடி சம்பாதித்ததில் கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகை, நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் 13-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.