இடைக்கால ஜாமீனில் வெளிவந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். கடவுள் தனக்கு 21 நாட்களை கொடுத்திருப்பதாகவும் சர்வாதிகாரத்தை ஒழிக்க 24 மணி நேரமும் பணியாற்றுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி அரசின் 2021-2022ம் ஆண்டு மதுபான கொள்கையை வகுத்ததிலும், அதை நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா சிபிஐக்கு பரிந்துரைத்திருந்தார். இதனையடுத்து சிபிஐ வழக்கப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியது. இந்த முறைகேடு மூலம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறையும் தனது பங்குக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இப்படியாக கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டது.
இதனையடுத்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவின் கீழ் தன்னை கைது செய்தது தவறு என்றும், அமலாக்கத்துறை சட்டவிரோதமாக செயல்பட்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மாவின் ஒரு நபர் அமர்வுக்கு முன்னர் விசாரிக்கப்பட்டு வந்து. விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் கெஜ்ரிவாலுக்கு சாதகமாக அமையவில்லை. மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே அவர் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார். உச்சநீதிமன்றத்தில் அவர் ஜாமீனோ, வேறு எந்த நிவாரணத்தையோ கோரவில்லை. மாறாக, அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை சட்ட விரோதம் என்று கூறியிருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. மே 3ம் தேதி இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, “கெஜ்ரிவால் மீதான விசாரணை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை நீண்ட காலம் நடைபெறும் நிலையில் லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரணமாக கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க இருக்கிறோம். நாங்கள் இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. வெறுமென பரிசீலிக்க இருக்கிறோம்” என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இதனையடுத்து மே 10ம் தேதியான நேற்று முன்தினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கறாராக வாதிட்டது. தேர்தல் பிரசாரத்திற்காக ஜாமீன் வழங்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, எங்களிடம் கெஜ்ரிவாலுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன என்றும் தெரிவித்து பிரமாண பத்திரத்தை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்தது. ஆனால் நீதிபதிகள் அமலாக்கத்துறையின் வாதங்களை ஏற்கவில்லை. “கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்குப்பதிவு செய்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், தேர்தலுக்கு வெகு சமீபத்தில்தான் அவரை கைது செய்திருக்கிறீர்கள். மட்டுமல்லாது இந்த வழக்கின் விசாரணை மேலும் நீடிக்கும் என்று தெரிகிறது. எனவே ஜாமீன் வழங்குகிறோம் என்று கூறி ஜாமீன் வழங்கினர்.
இதனையடுத்து கெஜ்ரிவால் நேற்று தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். தெற்கு டெல்லியில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் பங்கேற்ற அவர், சர்வாதிகாரத்தை ஒழிக்க 24 மணி நேரமும் பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார். அதாவது, “ஜூன் 4ல் இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியை அமைக்கும். நாங்கள் டெல்லிக்கு மாநில அந்தஸ்த்தை வழங்குவோம். நமது ஆளுநரை நாமே தேர்ந்தெடுப்போம். கடவுள் எனக்கு 21 நாட்களை வழங்கியுள்ளார். நான் சர்வாதிகரத்தை ஒழிக்க நாடு முழுக்க சுற்றி 24 மணி நேரமும் பணியாற்றுவேன்” என்று கூறியுள்ளார். இவருடன் ரோட் ஷோவில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.