பாலியல் வழக்கில் எச்டி ரேவண்ணாவிற்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, எச்டி ரேவண்ணாவிற்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ரூ.5 லட்சத்திற்கான பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சியின் எம்எல்வாக இருந்து வருபவர் எச்.டி. ரேவண்ணா. இவர், தனது மகன் பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட மைசூருவை சேர்ந்த பெண் ஒருவரை கடத்தியதாக சிறப்பு புலனாய்வு குழு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நீதிமன்றக் காவலில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ரேவண்ணா அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 4 நாட்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் எச்டி ரேவண்ணா வயிற்று வலி உள்ளிட்ட உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு பரப்பன அக்ரஹாரா சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண்ணை கடத்திய வழக்கில் ஏற்கனவே அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் கைதாகி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஜாமீன் கேட்டு பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் எச்.டி.ரேவண்ணா மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை நடந்தபோது, அந்த பெண்ணை எச்.டி.ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா பலாத்காரம் செய்திருப்பதால், கடத்தியதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது எனவும் கடந்த 9-ந் தேதி நடந்த விசாரணையின் போது சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதி எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி, அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் வந்தது. அப்போது எச்டி ரேவண்ணாவிற்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிடது. ரூ.5 லட்சத்திற்கான பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 4 ஆம் தேதி எச்டி ரேவண்ணாவை கைது செய்த சிறப்பு புலனாய்வு குழு போலீஸ், 3 நாட்கள் காவலில் வைத்து விசாரித்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.