காங்கிரசின் ‘மகாலட்சுமி’ திட்டம் ஏழை பெண்களுக்கு வரப்பிரசாதம்: சோனியாகாந்தி

காங்கிரசின் மகாலட்சுமி திட்டம் ஏழை பெண்களுக்கு வரப்பிரசாதம். ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று சோனியாகாந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, நேற்று ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி ‘மகாலட்சுமி’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். பெண்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ‘மகாலட்சுமி’ திட்டம் ஏழை பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

ஏற்கனவே காங்கிரசின் உத்தரவாதங்கள், கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்துள்ளன. 100 நாள் வேலைத்திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், கல்வி உரிமை சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் என எந்த திட்டமாக இருந்தாலும், அவற்றின் மூலம் காங்கிரஸ் கட்சி கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. ஆகவே, இந்த சிக்கலான தருணத்தில், காங்கிரசின் கை உங்களுடன் இருக்கிறது. இந்த கை உங்கள் சூழ்நிலையை மாற்றும். இவ்வாறு சோனியாகாந்தி கூறியுள்ளார்.