அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்பட இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்!

அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்பட வேண்டுமானால் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

ஜலான் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

நான்கு கட்ட தேர்தல் நடந்து விட்டது. பா.ஜ.க.வினர் நிலை குலைந்து போயிருக்கிறார்கள். ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள். இந்தத் தொகுதியில் டெல்லி அரசோ, உத்தரப் பிரதேச அரசோ இங்கு வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. நமது விவசாயிகளும் ஏழைகளும் சிரமத்தில் உள்ளனர். அவர்களுக்கு உதவ வேண்டிய மத்திய, மாநில அரசுகள், பெரிய தொழிலதிபர்களுக்கே உதவினார்கள். அவர்களின் பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்தார்கள். ஆனால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. பயிர்களுக்கு உரிய விலை கிடைக்க இண்டியா கூட்டணியும், சமாஜ்வாதி கட்சியும் ஒரு சட்டத்தை இயற்றி குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த முடிவு செய்துள்ளன.

பாஜக ஆட்சியில் 1 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இண்டியா கூட்டணி மற்றும் சமாஜ்வாதி அரசு அமைந்தால், அனைவரின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். மேலும் ஒவ்வொரு பயிருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும். நமது ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் அக்னிவீர் எனப்படும் 4 ஆண்டு வேலை திட்டத்தை ஏற்க மாட்டோம். ஜூன் 4-க்குப் பிறகு டெல்லியில் அரசு அமைந்தவுடன் அக்னி வீரர் முறையை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.