மோடி. பின்பற்றி வருவது காந்தியை அல்ல, கோட்ஸேவைதான்: ஜெய்ராம் ரமேஷ்!

மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ”இந்த முறை பதவி விலக இருக்கும் பிரதமர் மோடி அவருடைய தோல்விகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், அந்தப் பதிவில், “ரூ. 20,000 கோடி செலவு செய்தும் கங்கை ஏன் இன்றும் அசுத்தமாக உள்ளது? வாரணாசியில், தான் தத்தெடுத்த கிராமங்களை பிரதமர் மோடி ஏன் கைவிட்டார்? மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை அழிக்க பிரதமர் ஏன் உறுதியாக இருக்கிறார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “2014-ல் மோடி வாரணாசிக்கு வந்தபோது ‘அன்னை கங்கை என்னை இங்கு அழைத்தார்’ என்று கூறி, புனித கங்கையை சுத்தம் செய்யப் போவதாகக் கூறினார். ஆட்சிக்கு வந்த பிறகு ’ஆபரேசன் கங்கா’ என்னும் பெயரை ’நமாமி கங்கா’ என்று மாற்றினார். பத்து ஆண்டுகள் கழித்து ’நமாமி கங்கா’ திட்டத்துக்கு ரூ. 20,000 கோடி செலவானதாகக் கணக்குக் காட்டியுள்ளார். ஆனால், முடிவில் மாசுபட்ட நதி நீட்சிகளின் எண்ணிக்கை 51-ல் இருந்து 66 ஆக உயர்ந்துள்ளது. ஆபத்தான பாக்டீரியாக்கள், பாதுகாப்பான அளவான 71 சதவீதத்தை விட 40 மடங்கு அதிகமாக உள்ளதாக நீர் கண்காணிப்பு நிலையங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஆற்று நீரில் நுண்ணுயிர்க் கொல்லிகளை எதிர்க்கும் பாக்டீரியாக்களும் அதிகமாகிவிட்டன. ரூ.20,000 கோடி மக்களின் வரிப்பணம் எங்கே? ஊழல், நிர்வாகச் சீர்கேட்டால் எவ்வளவு பணம் பறிபோனது? அன்னை கங்கையை ஏமாற்றிய ஒருவரை எப்படி இந்த வாரணாசி மக்கள் நம்புவார்கள்?” என்றும் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தத்தெடுத்த கிராமங்களைப் பற்றி குறிப்பிட்ட ஜெய்ராம் ரமேஷ், “வாரணாசி நகருக்கு வெளியே எட்டு கிராமங்களைத் தத்தெடுத்துள்ளதாக பிரதமர் கூறினார். ஆனால், 2024 மார்ச் கள அறிக்கையின் படி, ஸ்மார்ட் பள்ளிகள், சுகாதார வசதிகள், வீட்டுவசதி என்று எந்த வாக்குறுதியும் 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளன. டாம்ரி கிராமத்தில் சரியான வீட்டுவசதி இல்லை, நாகேப்பூர் கிராமத்தில் சரியான சாலை வசதி இல்லை, ஜோகாப்பூர், ஜெயப்பூர் பகுதிகளில் வாழும் தலித் மக்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதி இல்லை, பரம்பூர் கிராமத்தை மொத்தமாக தண்ணீர் வசதித் திட்டத்தில் இருந்து நீக்கியுள்ளனர். பிரதமர் தத்தெடுத்தக் கிராமங்களின் நிலைமையே, அவர் தொகுதிகளுக்குச் செய்யும் கடமை உணர்வை வெளிக்காட்டுகிறது. ஏன் இந்த கிராமங்களை அவர் கைவிட்டார்? மோடியின் உத்தரவாதங்களின் உண்மை முகம் இதுதானா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”மகாத்மா காந்தியின் மீதுள்ள பற்றால், ஆச்சார்ய வினோபாவேவால் தொடங்கப்பட்டு, டாக்டர் ராஜேந்திர பிரசாத், லால் பஹதூர் சாஸ்திரி, ஜெயபிரகாஷ் நாராயணன் போன்றோரால் நடத்தப்பட்ட ‘சர்வ சேவா சங்கத்தை’ அழித்து நமது தேசத் தந்தையின் மீதான வெறுப்பைக் காட்டியவர் மோடி. அவர் பின்பற்றி வருவது காந்தியை அல்ல, கோட்ஸேவை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

சர்வ சேவா சங்கம் 13 ஏக்கர் நிலத்தில் முழுமையான ஆவணங்களுடன், வாரணாசி இரயில் நிலையத்திற்கு அருகில் இயங்கி வந்தது. ஆனால், இந்திய இரயில்வேயால் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 2023-ல் சங்கம் அங்கிருந்து அகற்றப்பட்டது. ஆனால், அந்த வளாகத்தின் ஒரு மூலையில் இருந்த ’காந்தி வித்யா சன்ஸ்தன்’ மட்டும் கையகப்படுத்தபடவில்லை. ஏனென்றால், அந்த வளாகம் ஆர்.எஸ்.எஸ்ஸால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. வெளிநாடுகளுக்குச் சென்று காந்தியைப் புகழ்வதும், உள்நாட்டில் காந்தியின் பெயரை அழிப்பதுமாக, ஏன் இந்த நாடகம் மோடி? உங்களால் காந்தியை விட கோட்ஸேவின் மீதுதான் பற்று அதிகம் என்பதை ஒப்புக்கொள்ள முடியுமா?” என்று தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.