நாட்டின் விமான நிலையங்களை பிரதமர் மோடி தமது ‘டெம்போ’ நண்பரிடம் ஒப்படைத்துவிட்டதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் தொழிலதிபர்கள் அதானி, அம்பானி மற்றும் பிரதமர் மோடியை தொடர்புபடுத்தி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். அதானி, அம்பானி ஆகிய கார்ப்பரேட் நண்பர்களுக்காகவே மோடி செயல்படுகிறார் என்பது ராகுல் காந்தியின் தொடர் குற்றச்சாட்டு. இதற்கு பதில் தந்த பிரதமர் மோடி, அதானி- அம்பானி மீதான ராகுல் காந்தி விமர்சனம் திடீரென நின்றுவிட்டது. அம்பானி – அதானியிடம் இருந்து டெம்போ நிறைய கறுப்புப் பணத்தை காங்கிரஸ் வாங்கிவிட்டது எனவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசிய இந்த பேச்சு பெரும் சர்ச்சையாகவும் வெடித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தொடங்கி இன்று வரை ஒவ்வொரு தலைவர்களும் பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.
இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளதாவது:-
இன்று நான் லக்னோ விமான நிலையத்தில் இருந்தேன். இங்கிருந்து மும்பை, கவுகாத்தியில் இருந்து அகமதாபாத் வரை அனைத்து விமான நிலையங்களையும் தனது ‘டெம்போ நண்பரிடம்’ ஒப்படைத்துள்ளார் பிரதமர். நாட்டின் சொத்துக்கள் எத்தனை டெம்போக்களுக்கு விற்கப்பட்டது என்பதை நரேந்திர மோடி பொதுமக்களிடம் சொல்வாரா? இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மேலும் மக்களின் சொத்துகளாக இருந்த லக்னோ, மும்பை, மங்களூர், அகமதாபாத், ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், குவஹாத்தி விமான நிலையங்கள் 50 ஆண்டுகளுக்கு பிரதமர் மோடியின் நண்பர் அதானிக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. இதற்காக எத்தனை ‘டெம்போ’ நிறைய பணம் வாங்கினாராம் மோடி? அதானியிடம் கறுப்புப் பணத்தைப் பெற்றுக்கொண்டு விமான நிலையங்களை விற்க எத்தனை ‘டெம்போக்கள்’ பயன்படுத்தப்பட்டன? பொதுமக்களிடம் சொல்லுங்கள்.. பிரதமர் மோடி.. பதில் சொல்லுங்க.. அதானியும் அம்பானியும் காங்கிரஸுக்கு கறுப்பு பணத்தைக் கொடுத்ததாக குற்றம் சாட்டினீர்களே.. இது குறித்து எப்போது அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் விசாரிக்கப் போகிறது? எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.