வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்!

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7 ஆகிய தேதிகளில் 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளன. 4-ம் கட்டமாக 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலம், வாராண தொகுதியில் 7-வது மற்றும் இறுதி கட்டமாக ஜூன் 1-ல் வாக்குப்பதிவு நடக்கிறது. பிரதமர் மோடி களமிறங்கும் தொகுதியான வாராணசி மிகவும் கவனம் பெற்றிருந்த நிலையில், அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார்.

பிரதமர் மோடியுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக மாநிலத் தலைவர் சவுத்ரி பூபேந்திர சிங் ஆகியோரும் சென்றனர். வாராணசியில் 3-வது முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.

வாராணயில் பிரதமர் மோடிக்கு எதிராக உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராயை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், கங்கைக் கரையில் உள்ள தசாஷ்வமேத் படித்துறையில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார். வேத மந்திரங்கள் முழங்க, கங்கைக் கரை படித்துறையில் ஆரத்தியும் எடுத்தார்.