ஒருவேளை உணவிற்காக பொதுமக்கள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்: பிரியங்கா காந்தி!

ஒருவேளை உணவிற்காக பொதுமக்கள் கடன் வாங்கும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வேதனை தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநில ரேபரேலியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், ரேபரேலியில் ராகுல் காந்தியும், அமேதியில், அந்தத் தொகுதியில் 40 ஆண்டுகளாக கட்சிப்பணி செய்துவரும் காங்கிரஸ் நிர்வாகி கிஷோரி லால் சர்மா என்பவரையும் காங்கிரஸ் களமிறக்கியிருக்கிறது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நாள்முதல் ரேபரேலி, அமேதி என இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார்.

அதன்படி ரேபரேலியில் பேசிய பிரியங்கா காந்தி, மக்கள் வறுமையில் வாடும்போதுக்கூட அவர்களது வங்கிக்கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்ய முன்வரமாட்டார் எனவும் பிரியங்கா காந்தி வருத்தத்துடன் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகள் செய்யாததை பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் செய்து காட்டியதாக ஒரு மாய பிம்பத்தை பொதுமக்கள் மத்தியில் பாஜகவுடன் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், அந்த மாய பிம்பத்தை மக்கள் நம்பமாட்டார்கள் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் காலங்களில் மட்டும் மத ரீதியிலான பிரச்சாரத்தை பயன்படுத்தி மக்களை பிரித்தாளும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.