ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் நீம் கா தானா மாவட்டத்தில் உள்ளது இந்துஸ்தான் காப்பர் லிமிடட் நிறுவனம். இதன் சுரங்கத்தை ஆய்வு செய்ய கொல்கத்தாவில் இருந்து அதிகாரிகள் குழு ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) வந்திருந்தது. அந்தக் குழுவானது ஆய்வை முடித்துக் கொண்டு நேற்றிரவு 8 மணியளவில் சுரங்கத்தில் இருந்து வெளியே வர முற்பட்டது. அப்போது லிஃப்ட்டின் ஒரு சங்கிலி எதிர்பாராத விதமாக அறுந்தது. லிஃப்ட் கீழே விழுந்தது, இதில் லிஃப்டில் இருந்த 15 பேரும் 700 மீட்டர் ஆழத்தில் சிக்கிக் கொண்டனர். உடனடியாக காவல் துறை, தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியை கையில் எடுத்தனர். 12 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் இவர்களில் 3 பேர் மட்டும் மீட்கப்பட்டனர். சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை மீட்புக் குழு உறுதி செய்தது.
பின்னர் அறுந்து விழுந்த லிஃப்ட் அருகே ஏணியைக் கொண்டு சென்று அதன் வழியாக சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். பின்னர் லிஃப்ட் கட்டி இழுக்கப்பட்டது. 15 பேரில் 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் மட்டும் உயிரிழந்தார். மீட்கப்பட்டவர்களில் சிலருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என அரசு மருத்துவமனை செவிலியர்கள் தெரிவித்தனர்.