நாகை- இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!

நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 13ம் தேதிக்கு பதில் நாளை (மே 17) தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை தொடங்க இருந்த கப்பல் சேவை மீண்டும் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியா – இலங்கை இடையேயான ஒப்பந்தத்தை தொடர்ந்து நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே கடந்த ஆண்டு ‛செரியாபாணி ‘ என கப்பல் சேவை தொடங்கியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி இந்த சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கடல் அழகை ரசித்தபடி பொதுமக்கள், வர்த்தகர்கள் நாகையில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து நாகைக்கும் பயணம் செய்தனர். அதன்பிறகு கனமழையை காரணம் காட்டி இந்த கப்பல் சேவை என்பது ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் வரும் மே மாதம் 13ம் தேதி முதல் நாகை-காங்கேசன்துறை இடையே கப்பல் சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ‛செரியாபாணி’க்கு பதில் இந்த முறை ‛சிவகங்கை’ என பெயர் கொண்ட கப்பல் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

‛சிவகங்கை’ பெயர் கொண்ட கப்பல் அந்தமானில் இருந்து நாகை வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் குறித்த நேரத்தில் அந்த கப்பல் நாகை வரவில்லை. இதையடுத்து கடந்த 13ம் தேதிக்கு தொடங்க வேண்டிய கப்பல் சேவை மே 17 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் தான் நாளை நாகையில் இருந்து இலங்கை புறப்பட இருந்த கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது நாகைக்கு வர வேண்டிய பயணிகள் கப்பல் இன்னும் வராததால் இந்த சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் கப்பலில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்த வர்த்தகர்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இருப்பினும் கூட டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மே 19 ம் தேதி கப்பலில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலை பொறுத்தமட்டில் கீழ்தளம், மேல்தளம் என 2 இடங்களில் பயணிகள் பயணிக்கலாம். கீழ்தளத்தில் 130 பேருக்கான இருக்கை உள்ளது. அதேபோல் சிறப்பு வகுப்பு என அழைக்கப்படும் மேல்தளத்தில் 25 இருக்கைகள் உள்ளன. மேல்தளத்தில் அமர்ந்து பயணித்தால் கடலின் அழகை சிறப்பாக காண முடியும். கீழ்தளத்தில் அமர்ந்து செல்ல பயணி ஒருவருக்கு ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து டிக்கெட் கட்டணமாக ரூ.5000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேல்தள இருக்கையில் அமர்ந்து செல்ல வேண்டும் என்றால் ரூ.7000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.7,670 கட்டணமாக இருந்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் நாள்தோறும் காலை 7 மணிக்கு புறப்படும் கப்பல் பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு 12 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நாகை வந்தடையும். பயணிகள் 50 கிலோ எடை வரை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தங்கள் உடைமைகளைக் கொண்டு செல்லலாம். இந்தியாவில் இருந்து இலங்கை செல்வோருக்கு விசா தேவையில்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் பாஸ்போர்ட் இருந்தாலே சுற்றுலா, தொழில் முறை பயணமாக இந்த கப்பல் மூலம் பொதுமக்கள் இலங்கை சென்று வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.