பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ சர்ச்சையில் பிரதமர் மோடி மற்றும் குமாரசாமி மீது அவதூறு பரப்ப டிகே சிவகுமார் தனக்கு ரூ.100 கோடி அளிக்க முன்வந்ததாக பாஜக நிர்வாகி தேவராஜே கவுடா புகார் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது வீட்டில் வேலை செய்த 48 வயது பெண் அளித்த புகாரின்பேரில், தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா, பேரன் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் இருக்கிறார் பிரஜ்வல் ரேவண்ணா.
இதற்கிடையே, பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோவை வெளியிட்டதாக கைது செய்யப்பட்டிருக்கும் பாஜக தலைவர் தேவராஜே கவுடா கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். சிறைக்கு செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய தேவராஜே கவுடா கூறியதாவது:-
பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ்களை பரப்பியது ஹெச்.டி.குமாரசாமிதான் என்று என்னிடம் சொல்லப்பட்டது. பிரஜ்வல் ரேவண்ணாவிடம் டிரைவராகப் பணிபுரிந்த கார்த்திக் கவுடாவே இவை அனைத்தையும் திட்டமிட்டார். இந்த சர்ச்சையில் பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும், குமாரசாமிக்கும் கெட்டபெயர் ஏற்படுத்திட தீவிரமாக செயல்பட்டனர். ஆபாச வீடியோ சர்ச்சையில் பிரதமர் மோடி மற்றும் குமாரசாமி மீது அவதூற பரப்ப டிகே சிவகுமார் எனக்கு ரூ.100 கோடி அளிக்க முன்வந்தார். பவுரிங் கிளப்பில் இருந்தபோது காங்கிரஸ் லோக்கல் தலைவரிடம் ரூ.5 கோடி எனது ரூமுக்கு அனுப்பி வைத்தனர். குமாரசாமியை அரசியல் ரீதியாக முடிப்பதே சிவகுமாரின் முக்கிய நோக்கம்.
நான் அவர்களின் திட்டத்தில் ஒரு பகுதியாக இருக்க மறுத்தபோது, அவர்கள் முதலில் என்னை ஒரு வன்கொடுமை வழக்கில் சிக்க வைத்தார்கள். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. பின்னர், அவர்கள் என்னை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்க வைத்தார்கள். அந்த தந்திரமும் தோல்வியுற்றபோது, அவர்கள் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். எனக்கு எதிராக நான்கு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர்களால் எந்த ஆதாரத்தையும் பெற முடியவில்லை. டிகே சிவக்குமார் என்னிடம் பேரம் பேசும் ஆடியோ ஆதாரம் உள்ளது. சிறையில் இருந்து வெளிவந்தபிறகு அதனை வெளியிட்டு சிவகுமாரை அம்பலப்படுத்துவேன். காங்கிரஸ் அரசு கவிழும். இவ்வாறு அவர் கூறினார்.