மோடி மீது இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலை புல்டோசர் கொண்டு அது இடிக்கும் என்று அபாண்டமாக பழிசுமத்திய நரேந்திர மோடி மீது இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா(யுபிடி) தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பு மும்பையில் இன்று(மே 18) நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவ சேனா(யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அது அயோத்தி ராமர் கோவிலை புல்டோசர் கொண்டு இடித்துவிடும் என்று நரேந்திர மோடி கூறி இருக்கிறார். புல்டோசரை ஏற்றி இடிக்கும் வேலையை செய்வது பாஜகதான். எந்த கட்டிடத்தையும் காங்கிரஸ் புல்டோசர் கொண்டு இடித்தது கிடையாது. ஆனால், பாஜக தலைவர் காங்கிரஸ் மீது மீண்டும் மீண்டும் அபாண்ட பழியை சுமத்துகிறார். இதன்மூலம், பொதுமக்கள் மத்தியில் கோபத்தைத் தூண்ட முயல்கிறார். பொதுமக்களை காங்கிரசுக்கு எதிராக தூண்டிவிட முயல்கிறார். இதுபோன்ற செயலை, வேறு எந்த சிறு தலைவராவது செய்திருந்தால் அதனை நாங்கள் பொருட்படுத்த மாட்டோம். ஆனால், பிரதமரே இவ்வாறு செய்கிறார்.

நம்மால் செய்ய முடியாததைச் சொல்லி பிரதமர் மோடி மக்களைத் தூண்டிவிடுகிறார். இது ஒருபோதும் நடக்காது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். எங்கள் அரசு வந்த பிறகு அனைத்தும் பாதுகாக்கப்படும். இதைத்தான் நமது அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. நாங்கள் அரசியலமைப்பை மட்டுமே பின்பற்றுவோம். மக்களை தூண்டிவிடும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், மோடி அரசால் அமல்படுத்தப்பட்ட தவறான ஜிஎஸ்டிக்கு பதிலாக அனைவருக்கும் எளிய, எளிதான, ஒரே கட்டண ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும். இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். விவசாயத்தில் இருந்து ஜிஎஸ்டி நீக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.