மக்களின் குடிநீர் தேவைக்காக என்ற பொய்யான காரணத்தை கூறி கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்காக அமராவதி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி. அதில் தற்போது 37 அடி உயரம் தான் தண்ணீர் உள்ளது. இதிலும் 22 அடி உயரத்துக்கு வண்டல் மண் தான் தேங்கி உள்ளது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அணையின் நீர் மட்டம் அதிகரிக்கவில்லை. இதற்கிடையே பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 15-ம் தேதி அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவின்பேரில் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தாராபுரம் நகராட்சி நிர்வாகத்தின் வேண்டுகோளின் படி கூட்டு குடிநீர் திட்டங்களுக்காக ஆற்றில் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி மே 16-ம் தேதி முதல் வரும் 21-ம் தேதி வரை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மடத்துக்குளத்தில் உள்ள அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கார்ப்பரேட் தோல் தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஆற்றில் முறைகேடாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறி மடத்துக்குளத்தில் உள்ள அமராவதி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.வீரப்பன் கூறியதாவது:-
அமராவதி பழைய மற்றும் புதிய ஆயகட்டு பாசனத்தில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் அமராவதி அணைக்கு நீர் வரத்து இல்லாமல் போனதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், கடந்த 16-ம் தேதி குடிநீர் தேவைக்காக அமராவதி ஆற்றில் 1000 கன அடி வீதம் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது ஆற்றில் வந்த தண்ணீரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், விவசாய நிலங்களுக்கும் மோட்டார் வைத்து திருடி வருகின்றனர். தனியார் கார்ப்பரேட் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக பொதுப்பணித்துறையினர் செயல்பட்டுள்ளனர்.
அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறப்பதை நிறுத்த வேண்டும். தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அரசு பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் கவனத்தை ஈர்க்கவே ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அமராவதி அணையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து பொதுப்பணித் துறையினர் கூறும்போது, “தாராபுரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக உரிய துறைகள் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையிலேயே ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் சமயங்களில் காகித, தோல் தொழிற்சாலைகள் தண்ணீர் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும் அணையில் தண்ணீர் இல்லாத போதும், குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் போது மனிதாபிமான அடிப்படையில் தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்காமல் தவிர்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசின் முறையான உத்தரவின் பேரிலேயே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது” என்றனர்.